3566.

     கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில்
          கடியனேன் காமமே கலந்து
     வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய
          வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
     மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை
          மக்களை ஒக்கலை மதித்தே
     நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     உள்ளெல்லாம் கசந்து உவட்டுகின்ற எட்டிக்காயினும் வெறுக்கத் தக்கவன்; காம நினைவு கொண்டு தன்னையே வியந்து மகிழும் வீணனாவேன்; கொடுமை செய்தற் கேதுவாகிய சினமுடையேன்; வெம்மைப் பண்பும் வெறிச் செயலும் உடையனாவேன்; மயக்க முடையேன்; உலகியல் வாழ்வையும் மனைவி மக்களையும் உறவினரையும் நிலைத்த பொருளாக மதித்து விரும்பி யிருப்பவன் என்றாலும் நெஞ்சில் அச்ச முடையனாய் உன்னையே நம்பி யிருக்கின்றேனாதலால், என்னைக் கைவிட லாகாது. எ.று.

     உடம்பின் உள்ளிட மெல்லாம் கசந்து வாய் உவட்டும் இயல்பு பற்றி, யாவராலும் விலக்கப்படுதலால், “காஞ்சிரங் காயில் கடியனேன்” என வுரைக்கின்றார். கடிதல் - விலக்குதல். காம நினைவுகளால் பலவற்றை நினைந்து மயங்கி வீண் பொழுது போக்குபவன் என்பாராய், “காமமே கலந்து வியந்துளே மகிழும் வீணனேன்” என விளம்புகின்றார். கொடிய செயல்கள் பலவற்றைச் செய்தற்குச் சினம் காரணமாதல் பற்றி, “கொடிய வெகுளியேன்” என்று கூறுகின்றார். வெய்யன் - வெம்மைப் பண்புடையவன். வெறியன் - வெறிச் செயலுடையவன். மயர்தல் - மயங்குதல். நிலையா வியல்புடையவற்றை என்றும் நிலைபெறுவன எனக் கருதி ஆசை வைத்தல் கூடாதாயினும் அதனைச் செய்பவன் என்றற்கு, “உலக வாழ்க்கையை மனையை மக்களை ஒக்கலை மதித்தே நயந்துளேன்” என்று நவில்கின்றார். இந்நினைவுகளின் வினை பயனை எண்ணி அஞ்சுகிறேன் என்பார், “பயந்துளேன்” எனப் பகருகின்றார்.

     இதனால், நினைவு, சொல், செயல்களின் விளைவு எண்ணி அஞ்சுகின்றமை கூறி அபயம் வேண்டியவாறாம்.

     (14)