3567. ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்
ஊர்தொறும் உண்டியே உடையே
தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து
தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்
வஞ்சமே பொருளென மதித்து
நாடினேன் எனினும் பாடினேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
உரை: மிக்க பேராசையால் உலகில் நாற்றிசையும் ஓடி ஊர் தொறும் உணவையும் உடையையும் விரும்பி எங்கும் தேடினேன்; காமக் களிப்பிலே விழுந்து அறிவு கலங்கினேன்; தெளிவின்றி மனம் வாடினேன்; சிறிது பொருள் வரின் அது கொண்டு மனம் மகிழ்ந்தேன்; வஞ்சம் புரிவதே தக்க தென எண்ணி அதனைச் செய்யும் திறமையை எண்ணினேன் என்றாலும் உன்னைப் பாடுதலை ஒழியேனாதலால், என்னைக் கைவிட லாகாது. எ.று.
பெரும் பேராசை - அளவு கடந்த ஆசை. ஆசை மிகுதியால் உலகில் எவ்விடத்தும் திரிந்த செயலை எடுத்துரைப்பாராய், “பெரும் பேராசையால் உலகில் ஓடினேன்” என வுரைக்கின்றார். உண்ணும் உணவுக்கும் உடுக்கும் உடைக்கும் ஊர் தோறும் இரந்தேன் என்றற்கு “ஊர்தொறும் உண்டியே உடையே தேடினேன்” என்று தெரிவிக்கின்றார். காமவிச்சை மேலீட்டால் கண்ட மகளிர்பால் கருத்தைச் செலுத்தியலைந்து வருந்திய நிலையைக் “காமச் சேற்றிலே விழுந்து தியங்கினேன்” என்றும் திகைத்து மயங்கினேன்” என்றும், இடையிடையே எய்திய மனநோயால் வருந்தினேன் என்றற்கு “வாடினேன்” என்றும் உரைக்கின்றார். “இரப்பவர் என்பெறினும் கொள்வர்” என்று சான்றோர் உரைப்பதற்கேற்ப, “சிறிய வாரியான் மகிழ்ந்தேன்” என்று கூறுகின்றார். சிறியவாரி - சிறிதளவாகிய வருவாய். வஞ்சநினைவுகட்கு ஆளாயினார் அவற்றின் வழியே செல்குவராதலால், “வஞ்சமே பொருளென மதித்து நாடினேன்” என மொழிகின்றார். இத்தனை குற்றங்கள் செய்தாலும் நான் உன் பொருள் சேர் புகழ்களை வாயாரப் பாடுதல் ஒழியேன் என்பாராய், “பாடினேன் உனையே” என்றும், “நம்பினேன்” என்றும் நவில்கின்றார்.
இதனால், செய்த குற்றங்கள் பலவற்றின் இடையே சிவனையே விரும்பி அவன் புகழ்களைப் பாடிய திறம் கூறியவாறாம். (15)
|