3568.

     காட்டிலே திரியும் விலங்கினிற் கடையேன்
          கைவழக் கத்தினால் ஒடிந்த
     ஓட்டிலே எனினும் ஆசைவிட் டறியேன்
          உலுத்தனேன் ஒருசிறு துரும்பும்
     ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன்
          எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக
     நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     காடுகளில் அலைகின்ற விலங்குகளிலும் கீழ்ப்பட்டவன்; கையாளுமிடத்து உடைந்த மன்னோடு ஆயினும் அதன்பாற் கொண்ட ஆசையால் வருந்துவேன்; ஒரு சிறு துரும்பாயினும் பிறர்க்குக் கொடுக்க மனமற்றவனாவேன்; எப்பொருளாயினும் ஏட்டில் எழுதிக் கணக்கிட்டுப் பார்க்கும் கொடியவனாவேன்; வாய் எச்சிலையும் உமிழாத கடும் பற்றுள்ளம் உடையவன்; நரகத்தில் கிடந்து வருந்துகின்ற மக்களுக்குப் பெரியவனாவேன்; இத்தகைய கொடும் பாவியாயினும் உன்னையே நம்பி னேனாதலால் என்னைக் கைவிட லாகாது. எ.று.

     காட்டிலே திரியும் விலங்கு என்றதனால் காடுகளில் அலையும் கொடுமை மிக்க விலங்கினம் என்பது பெறப்படும். கடையேன் - கீழ்ப்பட்டவன். கை வழக்கம் - கையாளுதல். உடைந்த ஓடுகளைப் புறத்தே எறிந்து விடுவராயினும் எனக்கு அவ்வாறு எறிவதிலும் விருப்பமில்லாத ஆசைப் பெருக்குடையேன் என்பாராய், “ஒடிந்த ஓட்டிலே எனினும் ஆசை விட்டறியேன்; என உரைக்கின்றார். உலுத்தல் - உலோபி. விலக்கக் தகுவனவற்றை விலக்காமல் எல்லாவற்றையும் சிறிதும் விடாது கணக்கிட்டு நோக்கும் கொடுஞ் செயல் உடையவன் என்றற்கு, “ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன்” என இயம்புகின்றார். எச்சிலும் உமிழ்ந்திடேன் என்பது எச்சிற் கையால் ஈ ஓட்ட மாட்டார் என்னும் உலகுரையை ஒட்டி நிற்கிறது. நரக நாடு - பாவம் செய்தார் கிடந்து வருந்தும் நிரயம். நரகத்தில் கிடந்து வருந்தும் பெரும் பாவிகளில் மிக்க பெரும் பாவி என்றற்கு, “நரக நாட்டிலே பெரியேன்” என நவில்கின்றார்.

     இதனால், காட்டில் வாழும் விலங்குகளிலும் குணஞ்செயல்களால் கடைப் பட்டவனாயினும் உன்னையே நம்பி யிருக்கின்றேனாதலால் என்னைக் கைவிட லாகாதென வேண்டியவாறாம்.

     (16)