3569.

     துனித்தவெம் மடவார் பகல்வந்த போது
          துறவியின் கடுகடுத் திருந்தேன்
     தனித்திர வதிலே வந்தபோ தோடித்
          தழுவினேன் தடமுலை விழைந்தேன்
     இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே
          இடர்ப்பட்ட நாயென இளைத்தேன்
     நனித்தவ றுடையேன் என்னினும் உனையே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     உள்ளத்தே வெறுப்புடைய வெவ்விய மகளிர் பகற் பொழுதில் என்பால் வந்த பொழுது கடுந் துறவி போலக் கடுகடுப்புடன் இருப்பேன்; அவர்கள் இரவில் தனியாக வந்த போது ஓடி அவர்களது பெரிய மார்பை நயந்து தழுவிக் கொள்வேன்; இனிய சொற்களையே அவர்களோடு பேசுவேன்; எலும்பைக் கடித்து வாய் புண்ணுற்று வருந்தும் நாய் போலச் சோர்வுற்றேன்; இவ்வாறு தவறுகள் பல மிகவுடையேனாயினும் உன்னையே விரும்புகின்றேன் ஆதலால் என்னைக் கைவிடலாகாது எ.று.

     துனித்தல் - வெறுத்தல். ஆசை நிரம்பாமையால் உளதாவது. துறவி - ஐம்புலன் ஆசைகளைத் துறந்தவர். பகலில் வந்த போது கடுகடுத்திருந்த குறைதீர்தல் பொருட்டு இரவில் தனித்து வந்த போது இனித்த சொல் புகன்றேன் என இசைக்கின்றார். என்பு - எலும்பு. கறித்தல் - கடித்தல். தவறு நனியுடையேன் என்பது நனித்தவறு உடையேன் என வந்தது.

     இதனால் காமத் தீ யொழுக்கத்தின் புன்மையைப் புகன்றவாறாம்.

     (17)