3570. தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார்
தலத்திலே வந்தபோ தவரைப்
பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்
பாதகப் பூனைபோல் இருந்தேன்
பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து
பேசினேன் வஞ்சரிற் பெரியேன்
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
உரை: நான் ஆண்மக்கள் பலரொடு கூடுகின்ற யிடத்திலே பொன் மாலையணிந்த பருத்த முகையையுடைய மகளிர் வருவார்களாயின் அவர்களைப் பார்ப்பதும் அவர்களோடு பேசுவதும் செய்யாமல் தவக்கோலம் கொண்ட தீங்கு செய்யும் பூனை போல் இருந்தேன்; பின்பு நான்
தனித்திருக்கும் நிலையில் நானே அவர்களிடம் சென்று வலியப்பேசினேன்; இவ்வாற்றால் வஞ்சகர்களில் பெருவஞ்சகனாகப் பிறங்கினேன்; அன்பற்ற மனம் உடையேனாயினும் உன்னையே நயந்துள்ளேனாதலால் என்னைக் கைவிடலாகாது. எ.று.
தார் - ஈண்டுப் பொன்மாலை மேற்று. பெரிய ஆன்மக்கள் பலருடன் கூடி யிருக்குமிடத்து மகளிர்வரின் பிறர் ஐயுறாமைப்பொருட்டு அவர்களோடு தொடர்பு கொண்டிலேன் என்பாராய், “அவரைப் பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப் பாதகப் பூனைபோல் இருந்தேன்” என்று உரைக்கின்றார். தவசுப் பாதகப் பூனை என்பது, உருத்திராக்கப் பூனை என்ற உலக வழக்கை ஒட்டியது. தனித்த போது உள்ளத்தில் நிலவும் காமவேட்கை நீங்காமையின் அதனால் அம்மகளிரிடத்து நயந்தடைந்து வலியப் பேசிய தீச்செயலை, “தனித்த போது போய் வலிந்து பேசினேன்” என வருந்துகின்றார். தமது செயல் வஞ்சம் பொருந்தியதாதலால் “வஞ்சரிற் பெரியேன்” எனக் கூறுகின்றார். நார்த்திடர் - ஈரமின்றி யுலர்ந்த மண் மேடு. அன்பின்றிக் கெட்ட தமது மனத்தை இதனால் குறிப்பிடுகின்றார்.
இதனால், தமது வஞ்சச் செயலின் புன்மையை எடுத்துப் புகன்றவாறாம். (18)
|