3571.

     பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன்
          பேய்எனப் பிடித்தனன் மடவார்க்
     குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட்
          டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன்
     தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்
          சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன்
     நண்மையே அடையேன் என்னினும் உனையே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     பெண்ணியல்பையே பெரிதும் விரும்புவேன்; அவர்களது மனவியல்பு அறியாது பேய் போல அவர்களைப் பற்றினேன்; அம்மகளிரிடத்து மெய்யே மொழிவது போலப் பேசி அவர்களைத் தீண்டி மகிழ்ந்து மனம் களிப்புற்ற பொய்மனத்துக் கடையவனாவேன்; குளிர்ச்சியான இயல்பு சிறிதுமின்றி வெவ்விய தன்மையையுடையவனாய் சாத்திரங்கள் பலவற்றை எடுத்தோதி வாய் பெருத்தேன்; யாரிடத்தும் நட்புக் கொள்ளுவது இல்லாதவன் என்றாலும் உன்னிடத்து மிக்க நம்பிக்கையுடையவனாதலால் என்னைக் கைவிடலாகாது. எ.று.

     பெண்மை - பெண்ணிடத்தும் பெறும் இன்பம். மகளிரது விருப்பு வெறுப்பு அறியாமல் பேய் போலப் பின் தொடர்ந்தேன் என்பாராய் “அவர் மனம் அறியேன் பேய் எனப் பிடித்தனன்” என வுரைக்கின்றார், மகளிரது கூட்டம் பெறும் பொருட்டுப் பொய் பல புகன்று ஒழுகிய புன்மையைப் புலப்படுத்தற்கு, “மடவார்க் குண்மையே புகல்வான் போன்று அவர்தமைத் தொட்டு உவந்து அகம்களித்த பொய்யுளத்தேன்” எனப் புகல்கின்றார். தன்மை - அன்பு மிகுதியால் உளதாகும் குளிர்ச்சிப் பண்பு. சாத்திரங்களையும் அவற்றின் பொருள்களையும் தங்கு தடையின்றி இடை யறாமல் எடுத்துரைக்கும் சொல்வன்மையை எடுத்துரைப்பாராய், “சாத்திரம் புகன்று வாய் தடித்தேன்” என்று சொல்லுகின்றார். நண்மை - நட்பு; பிறரை யன்பால் நெருங்கும் தன்மை எனினும் அமையும்.

     இதனால், மகளிர் கூட்டம் பெறுவதும், சாத்திரம் ஓதுவதுமாகிய செயல் வகைகளால் புன்மை யுற்றமை புகன்றவாறாம்.

     (19)