3572.

     வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல்
          வாதிபோல் வார்த்தைகள் வழங்கி
     அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை
          அடிக்கடி வாங்கிய கொடியேன்
     இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை
          எனைவிடக் கொடியருக் கீந்தேன்
     நன்மையுற் றறியேன் என்னினும் உனையே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     வலி யில்லாத பொருள்களின் மேல் ஆசை யில்லாதவன் போலவும், வாதம் புரிவதில் வல்லவன் போலவும், பேச்சு வார்த்தைகளைச் சொல்லி ஆகாத வழியில் பிறரிடத்து வஞ்சனையால் அடிக்கடி பொருள் பெற்று ஒழிகின்ற கொடியவனாவேன்; அன்றியும், வறுமை யுற்றவர்க்கு ஒருசிறிதும் பொருள் உதவி செய்யாதவனாயினும் என்னை விடக் கொடுமை மிக்கவர்க்குப் பொருள் கொடுத்து உதவினேன்; நன்மை, ஒன்றும் யார்க்கும் செய்யாதவனாயினும் உன்பால் அன்பு உடையேனாதலால் என்னைக் கைவிட லாகாது. எ.று.

     மிக்க வலிதாய்ப் பயனுள்ள பொருளையே யாரும் விரும்புவராதலால், “வன்மையில் பொருள் மேல் இச்சை இல்லவன் போல்” எனக் கூறுகின்றார். தாம் சொல்லுவனவற்றைக் கேட்பவர் மறுத்துரைக்காதவாறு தக்க காரணம் காட்டி யுரைக்கும் திறம் விளங்க, “வாதி போல் வார்த்தைகள் வழங்கி” எனக் கூறுகின்றார். பிறர்பால் உள்ள பொருளை நயமாகவும் வஞ்சனையாகவும் தீய நெறி மேற் கொண்டு அடிக்கடி வாங்கிக் கொள்வது அறமன்றாகலின், “அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை அடிக்கடி வாங்கிய கொடியேன்” என உரைக்கின்றார். உதவி பெறுவதற்குரிய வறியவருக்கு உதவாமல் இல்லென மறுத்த வழி ஒறுக்கும் கொடியவருக்குப் பொருளீந்த நிலையை, “இன்மையுற் றவருக்கு உதவிலேன் பொருளை எனை விடக் கொடியருக்கு ஈந்தேன்” எனக் கூறுகின்றார். இச்செயல்களால் நலம் ஒன்றும் எய்தாமை யுணர்ந்து, “நன்மையுற் றறியேன்” என்றும், என்றாலும் உன்பால் அன்பு கொள்ளுவதில் கையொழியேன் என்பாராய், “உனையே நம்பினேன் கைவிடேல் எனையே” என்று விண்ணப்பிக்கின்றார்.

     (20)