3573.

     கட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே
          காசிலே ஆசையில் லவன்போல்
     பட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்
          பகல்எலாம் தவசிபோல் இருந்தேன்
     இட்டமே இரவில் உண்டயல் புணர்ந்தே
          இழுதையிற் றூங்கினேன் களித்து
     நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     பிறர் துன்பத்தை எண்ணாமல் காதல் ஆசை யில்லாதவன் போல் பெயர் தோற்றுவித்து என்பால் வந்தவரிடத்தே பணம் பெற்றுத் திரிந்தேன்; பகற் போதுகளில் பெரிய துறவி போல் இருந்து இரவில் விரும்பியதை மிக வுண்டு அயல் மகளிரோடு கூடிக் கீழ்மகன் போல் மகிழ்ச்சியுடன் தூங்கினேன்; இவ்வாறு கேடு பல புரிந்துள்ளேனாயினும் உன்னையே விரும்பி யிருக்கின்றேனாயினும் என்னைக் கைவிட லாகாது. எ.று.

     கட்டம் - துன்பம். பட்டம் - நற்பெயர். தவசி - பெரிய துறவி. தவம் செய்பவனைத் தவசி என்பர். இட்டம் - விருப்பம். இரவில் நிரம்ப உண்பது காம நோயை விளைவிக்கும் என்பது பற்றி, “இரவில் உண்டயல் புணர்ந்தே களித்துத் தூங்கினேன்” என்று சொல்லுகின்றார். இழுது - மெழுகு. எளிதில் உருகி மெலிவது பற்றிக் கீழ்மக்களை, “இழுதை” என்பது நூல்வழுக்கு. இழுது போன்ற உள்ளம் உடையவனை இழுதை என இகழ்வர் நட்டம் - கேடு.

     இதனால், நட்டம் விளைவிக்கும் செயல்களையே செய்தேன் ஆயினும் உன்னையே நம்புகின்றேன் என்று உரைத்தவாறாம்.

     (21)