3574. காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக்
காட்டிடா தம்பெலாம் அடங்கும்
தூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச்
சுகத்தினால் சோம்பினேன் உதவா
ஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும்
ஈந்திலேன் ஈந்தவன் எனவே
நாணிலேன் உலரத்தேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
உரை: நில புலன்களை விரும்பும் என் ஆசையைப் பிறர்க்குக் காட்டாமல் அம்பு வகைகள் அடங்கி யுள்ள தூணி போல, கரவு பொருந்தி யிருந்தேன்; அன்றியும், சோர்வுண்டு இனிது இருக்கும் சுகம் காரணமாகச் சோம்பல் மிக்கிருந்தேன்; எதற்கும் உதவாத ஏணி போன்ற யான் யாசிப்பவர்க்கு நெல், உமி கூடக் கொடாத உள்ளம் உடையனேனாயினேன்; பிறர்க்கு வேண்டுவன உதவுபவன் போல நாணமின்றி வாயால் பாடி யுறைந்தேன் என்றாலும் உன்னையே நம்பினேனாதலால் என்னைக் கைவிட லாகாது. எ.று.
காணி - வயல்களில் அளந்து கொண்ட பகுதிகளில் ஒன்று. கருத்து - ஈண்டு ஆசை மேல் நின்றது. அம்பெலாம் அடங்கும் தூணி - வில் வேட்டை யாடுவோர் விலங்குகளை எய்தற்குத் தொகுத்து வைக்கும். கருவி. இதனை அம்பறாத் தூணி என்பது வழக்கு. வாயம்பு, பிறையம்பு, கூரம்பு எனப் பல்வகை உண்மையின், “அம்பெலாம்” என மொழிகின்றார். சார்ந்திருந்தனன் என்றவிடத்துச் சார்பு, கரவுள்ளத்தைக் குறிக்கின்றது. சோர்வுண்ட மயக்கத்தைச் “சோற்றுச் சுகம்” என்று கூறுகின்றார். உதவா ஏணி - முறிந்து பயன்படா தொழிந்த ஏணி. பயன்படாமை குறிக்க, “உமியும் ஈந்திலேன்” என இசைக்கின்றார். ஈயாதவனாயினும், வரையாது ஈந்தவன் எனப் பொய் கூறுதலின், “நாணிலேன் உளத்தேன்” எனக் கூறுகின்றார்.
இதனால், மண்ணாசையும் ஈயாமையும் பிறவுமாகிய குற்றமுடைமையை எடுத்தோதித் தம்மைக் கைவிட லாகா தென்று எடுத்தோதியவாறாம். (22)
|