3575.

     அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன்
          அடிக்கடி பொய்களே புனைந்தே
     எடுத்தெடுத் துரைத்தேன் எனக்கெதிர் இலைஎன்
          றிகழ்ந்தனன் அகங்கரித் திருந்தேன்
     கொடுத்தவர் தமையே மிகவுப சரித்தேன்
          கொடாதவர் தமைஇகழ்ந் துரைத்தேன்
     நடுத்தய வறியேன் என்னினும் உனையே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     என்னை யடைந்தவர்கள் அறிவு மயங்கி என்னைப் பெரியவனாக மதிக்குமாறு எண்ணி அடிக்கடி பொய் யுரைகள் பலவற்றைப் புனைந்து எடுத்தெடுத்துப் பேசினேன்; பேச்சில் எனக்கு இணை யாவருமில்லை யென்று பிறரை யிகழ்ந்து அகங்காரம் கொண்டேன்; எனக்கு யாதேனும் ஒன்று கொடுத்தவர்களையே மிகவும் உபசரிப்பதும், கொடாதவர்களை யிகழ்ந்துரைப்பதும் செய்வேன்; மனத்தின்கண் யாவரிடத்தும் தயை செய்வது என்பால் இல்லை யெனினும், உன்னையே நம்பினேனாதலால் என்னைக் கைவிட லாகாது, காண். எ.று.

     அடைந்தவர் எவராயினும் தன்னை யுயர்வாக எண்ண வேண்டுமென்று கருதித் தம்பால் இல்லாத நற்பண்புகளை யுள்ளனவாகப் பொய்யாகப் புனைந்தும், அதனைப் பன்முறையும் அடுத்தடுத்து உரைத்தால் அது மெய்யாய் விடும் என்று கருதினேன் என்பார், “அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன் அடிக்கடி பொய்களே புனைந்தே எடுத்தெடுத் துரைத்தேன்” எனக் கூறுகின்றார். உரிய செயல் வகைகளில் தனக்கு நிகராகார் என்று பிறரை இகழ்ந்து வாயால் அகங்காரமாகப் பேசினேன் என்பார், “எனக்கெதிர் இலை என்று இகழ்ந்தனன் அகங்கரித்திருந்தேன்” என்று கூறுகின்றார். கொடுத்தாரைப் புகழ்தலும் கொடாரையிகழ்தலும் உலகியல்பு ஆதலின், அது தம்பால் உளதாதனை எடுத்துரைப்பார், “கொடுத்தவர் தமையே மிக உபசரித்தேன் கொடாதவர்தமை யிகழ்ந்து உரைத்தேன்” என்று உரைக்கின்றார். நடுத் தயவு - மனத்தின்கண் நிலவும் தயை. நடுவிட மாதலின் மனம் நடு வெனப்படுகின்றது.

     இதனால், பிறர் மதிக்கப் போலி ஒழுக்கம் கொண்டமை எடுத்தோதித் தம்மைக் கைவிட லாகா தென வேண்டியவாறாம்.

     (23)