3576.

     எளியவர் விளைத்த நிலமெலாங் கவரும்
          எண்ணமே பெரிதுளேன் புன்செய்க்
     களியுணும் மனையில் சர்க்கரை கலந்து
          காய்ச்சுபால் கேட்டுண்ட கடையேன்
     துளியவர்க் குதவேன் விருப்பிலான் போலச்
          சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன்
     நளிர்எனச் சுழன்றேன் என்னினும் உனையே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     ஏழை மக்கள் பயிர் செய்த வினைபுலன்களைக் காணும் போதெல்லாம் அவற்றை எனக்கே உரியனவாக்கிக் கொள்ளும் எண்ணமே யுடையவனாவேன்; புன்செய்களில் விளையும் பொருள்களைக் கொண்டு கறி சமைத்து உண்போர் மனைக்குச் செல்வேனாயின், சர்க்கரை கலந்து காய்ச்சிய பாலுணவே வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுண்ட கீழ்மைப் பண்புடையவனாவேன்; உண்பதில் சிறு துளியும் பிறர்க்கு உதவ மாட்டேன்; உண்ணும் அப்பால் உணவை விரும்பாதவன் போலச் சுவை பெற வுண்டு சுவைத்த நாக்கை யுடையவனாவேன்; நண்டு போல எங்கும் சுழன்றலையும் இயல்பினேன் என்றாலும், உன்னையே நம்பி யுள்ளேனாதலால் என்னைக் கைவிட லாகாது. எ.று.

     எளியவர் - ஏழை மக்கள். அவரது விளைபுலம் குறுகிய பரப்பினதாய் நன்கு பேணப்பட்டுப் பயிர் செய்யப்படுதலால் அழகு திகழும் அதன் நலம் கண்டு பாராட்டுதல் ஒழிந்து எனக்கே உரியதாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் ஆசை மிக்கு உடையவனாவேன் என்பார், “எளியவர் விளைத்த நிலமெலாம் கவரும் எண்ணமே பெரிதுளேன்” எனப் புகல்கின்றார். புன்செய்க் களி - கம்பு கேழ்வரகு முதலிய உண்பொருள்களால் செய்யப்படும் உணவு வகைகள் எனப்படும். நெல்லுணவு இன்மையின் புன்செய்க் களி யுணவு வேண்டப்படுகிறது. அவர்கட்குச் சர்க்கரை கலந்த பாலுணவு கிடைத்தல் அரிதாயினும் அவர்களை வற்புறுத்திக் கேட்டு வாங்கி யுண்ட செயலால் கடைப்பட்ட பண்புடையராதல் புலப்படுத்தற்கு, “சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டுண்ட கடையேன்” எனக் கட்டுரைக்கின்றார். தாம் உண்ணும் உணவைப் பார்த்துண்டல் நல்லறமாயினும் தாம் அது செய்யாமை வெளிப்படுத்தற்கு, “துளியவர்க்கு உதவேன் விருப்பிலான் போலச் சுவை பெறச் சுவைத்த நாக்குடையேன்” என்று கூறுகின்றார். நளிர் - நண்டு. எவ்விடத்தும் சுழன்றலைந்த தன்மை தோன்ற, “நளிர் எனச் சுழன்றேன்” என்று கூறுகின்றார்.

     இதனால், பிறர் வருத்தம் நோக்காது ஒழுகுகின்ற ஈரமில்லாப்பண்பை எடுத்தோதி என்னைக் கைவிட லாகா தென வேண்டியவாறாம்.

     (24)