3577.

     கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன்
          கோடுறு குரங்கினிற் குதித்தே
     அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம்
          அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன்
     மலைவுறு சமய வலைஅகப் பட்டே
          மயங்கிய மதியினேன் நல்லோர்
     நலையல எனவே திரிந்தனன் எனினும்
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     உயிர்க்கொலை பலவற்றைச் செய்து அவற்றின் புலாலை உண்டிருந்தேன்; மரக் கொம்புகளில் வாழும் குரங்கைப் போல இங்குமங்கும் துள்ளிக் குதித்து அலைகின்ற மனத்தை யுடையவனாவேன்; உண்மையறிவு ஒருசிறிதும் இல்லாதவனாயினும் எல்லாம் அறிந்தவன் போலப் பிறர்க்கு எடுத்துரைத்தேன்; மயக்கத்தைச் செய்கின்ற சமய நூல்களின் கவர்ச்சிக்குள்ளாகி மயங்குகின்ற மதியையுடையவன்; நல்லவர்கள் பார்த்து ‘நீ நல்லவன் இல்லை’ என்று ஏசும்படி எங்கும் திரிந்தேன்; என்றாலும், உன்னை நம்பியுள்ளேனாதலால் என்னைக் கைவிடலாகாது. எ.று.

     புலால் உண்பவன் பிறவுயிர்களைக் கொன்றுண்ணும் இயல்பினனாதலால், “கொலை பல புரிந்து புலை நுகர்ந்திருந்தேன்” என்று கூறுகின்றார். ஒரு பொருளினும் ஓரிடத்தும் நில்லாது பல திறமான எண்ண அலைகளால் அலைவது பற்றி மனத்தை, “கோடுறு குரங்கினிற் குதித்தே அலைதரு மனத்தேன்” எனவுரைக்கின்றார். புல்லறிவாளன் என்பதைப் புலப்படுத்தற்கு “அறிவிலேன் எல்லாம் அறிந்தவன் போல் பிறர்க்கு உரைத்தேன்” என்று பேசுகின்றார். சமய நூல்கள் பலவும் தத்தம் சமயக் கருத்துக்களைச் சாலச் சிறந்தவை என இனிய மொழிகளாலும், ஏது எடுத்துக் காட்குக்களால் வற்புறுத்திக் கற்பார் மனத்தைக் கலக்கி மயக்கித் தம்பால் கவர்ந்து கொள்வதால், “மலைவுறு சமய வலை அகப்பட்டே மயங்கிய மதியினேன்” என்று கூறுகின்றார். மலைவு - மயக்கம். தெளிவின்மையால் ஐயத்தில் கிடத்தி யலைத்தல் என்றுமாம். இன்னோரன்ன குணம் செயல்களைக் காண்கின்ற நல்லவர்கள் “நீ நல்லையில்லை” எனப் பழிக்கின்றனர் என்பார், “நல்லோர் நிலையல எனவே திரிந்தனன்” என நவில்கின்றார்.

     இதனால், நல்லோர்க்குப் பொல்லனாய் திரிந்தமை கூறி அபயம் வேண்டியவாறாம்.

     (25)