3578.

     ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்
          எட்டியே எனமிகத் தழைத்தேன்
     பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப்
          பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன்
     காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன்
          கல்லெனக் கிடந்தனன் குரைக்கும்
     நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     ஈயைப் போல் எங்கும் பரந்தும், எறும்பைப் போலத் திருந்தி வருந்தியும், எட்டி மரம் போலத் தழைத்தும் உள்ளேன்; பேய் போல எங்கும் சுழன்றேன்; பித்தேறியவன் போல வாயில் வந்தனவற்றைச் சொல்லிக் கொண்டு ஊர்தோறும் சென்றேன்; காய் போலக் காய்த்துக் கடையவன் என்று கண்டோர் கூற வொழுகினேன்; கல் போலச் செயலற்றுக் கிடப்பதும் நாய் போலக் குரைத்துக் கொண்டு திரிவதும் செய்தேன்; என்றாலும், உன்னை நம்பினேனாதலால் என்னைக் கைவிட லாகாது. எ.று.

     மலங்களை நாடி மொய்த்துண்டு பறந்து திரியும் ஈக்களைப் போல இழிபொருளை நாடினேன் என்பார், “ஈயெனப் பறந்தேன்” எனவும், ஓய்வின்றி யோடி யுழைத்தமை தோன்ற, “எறும்பென உழன்றேன்” எனவும் இயம்புகின்றார். விரும்புவார் இன்மையின் எட்டி மரம் மிகத் தழைத்திருப்பது போலத் தானும் பிறர்க்குப் பயன்படாது பருத்து வளர்ந்திருந்தமை புலப்பட, “எட்டியே என மிகத் தழைத்தேன்” என்கின்றார். குறிக்கோளின்றி அலைந்தமை விளங்க, “பேயெனச் சுழன்றேன்” எனவும், எப்போதும் யாவரோடும் பொருளல்லவற்றைப் பேசித் திரிந்தமை பற்றி, “பித்தனே என வாய்ப் பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன்” எனவும் எடுத்துரைக்கின்றார். பயன்படாமை தோன்ற, “காயெனக் காய்த்தேன்” என்றும், நல்லொழுக்கம் இல்லாமை பற்றிக் “கடையென நடந்தேன்” என்றும், சோம்பல் மிகவுற்றுச் செயலற்றுக் கிடந்தமையால், “கல்லெனக் கிடந்தனன்” என்றும், எவரைக் காணினும் யாதாயினும் பேசிக் காலம் கழித்தமையின், “குரைக்கும் நாயெனத் திரிந்தேன்” என்றும் கூறுகின்றார்.

     இதனால், தமது செயற் புன்மையைப் பார்த்துக் கூறித் தம்மைக் கைவிடலாகாது என்று வேண்டியவாறாம்.

     (26)