3579.

     ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த
          ஊத்தையேன் நாத்தழும் புறவே
     வென்றியே உரைத்து வினைகளே விளைத்த
          வீணனேன் ஊர்தொறுஞ் சுழன்ற
     பன்றியே அனையேன் கட்டுவார் அற்ற
          பகடெனத் திரிகின்ற படிறேன்
     நன்றியே அறியேன் என்னினும் உனையே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     உணவு ஒன்றையே வேண்டி யுண்டு உடல் பருத்த அழுக்குடைய யான் என்னுடைய வெற்றிச் செயல்களையே பிறரெல்லாம் கேட்க நாத்தழும்பேற வுரைத்து, பலவாகிய வினைகளைச் செய்தொழிந்த வீணணாவேன்; ஊர்கள் தோறும் சென்று மலம் நாடித் திரிகின்ற பன்றியை ஒப்பேன்; கூட்டி வைத்துப் பேணுவார் அற்ற காளைபோலத் திரிகின்ற வஞ்சகனாய் நன்மை சிறிதும் அறியாதவனாய்க் கெட்டேன். ஆயினும், உன்னையே நம்பினேனாதலால் என்னைக் கைவிடலாகாது; எ.று.

     உணவு உண்பது ஒன்றிலே கருத்தொன்றி யுண்டு கொழுத்தமை விளங்க “ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த ஊத்தையேன்” என்று கூறுகின்றார். பிறர் கேட்டு மெய்யென எண்ணி வியக்குமாறு மனம் போனபடிப் பேசிய குற்றத்தை, “வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன்” என்று கூறுகின்றார். நன்பொருளை நயவாமை விளங்கவும், மனம் போனபடித் திரிந்தமை புலப்படவும், “ஊர் தொறும் சுழன்ற பன்றியே யனையேன் கட்டுவார் அற்ற பகடு எனத் திரிகின்ற படிறேன்” என்று கூறுகின்றார். இவ்வாற்றால் தீமையே மன நினைவில் மிக்குத் தோன்றமையின், “நன்றியே அறியேன்” என நவில்கின்றார்.

     இதனால், நன்றியே அறியேனாயினும் உன்னையே நம்பினேனாதலால் என்னைக் கைவிடலாகா தென முறையிட்டவாறாம்.

     (27)