3580. கவையெலாந் தவிர்ந்த வெறுமரம் அனையேன்
கள்ளனேன் கள்ளுண்ட கடியேன்
சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன்
துட்டனேன் தீதெலாந் துணிந்தேன்
இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ
இந்தநாள் இறைவநின் அருளால்
நவையெலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
உரை: கிளையெல்லாம் வெட்டிக் கழிக்கப்பட்ட வெறுமரத்திற்கு ஒப்பாகிய யான் ஒரு கள்வனாவேன்; கள்ளுண்டமையால் விலக்கத் தக்கவனானேன்; சுவை வகைகள் பலவற்றையும் விரும்பி அவை நிலவுமிடத்தே சுற்றித் திரிந்த ஓர் கீழ் மகனாவேன்; துட்டச் செயல்கள் உடைமையால் தீய செயல்கள் பலவற்றைச் செய்ய நினைத்தேன்; இவை யெல்லாம் கழிந்த அவ்விளமைக் காலத்தில் உடையனாய் இருந்தேனோ அல்லனோ அறியேன்; இந்நாளில் நினது திருவருளால் இறைவனே, குற்றமெல்லாம் நீங்கித் தூயவனாய் உன்னையே நம்பி யிருக்கின்றேன்; ஆதலால் என்னைக் கைவிட லாகாது காண். எ.று.
கவை - சிறியவும் பெரியவுமாகிய கிளைகள். “சுவையாகி கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்” என ஒளவையாரும் கூறுகின்றார். கவையும் கொம்பும் கழிந்திருக்கும் மரங்கள் யாவராலும் விரும்பப்படாமை பற்றி, “கவையெலாம் தவிர்ந்த வெறுமரம் அனையேன்” என விளம்புகின்றார். கள்ளன் - திருடன். கள்ளுண்பவனைச் சான்றோர் விரும்பாராதலின், “கள்ளுண்ட கடியேன்” என உரைக்கின்றார். ஒருசில சுவைகளையன்றிப் பலவற்றை விரும்பி, நிலவுமிடம் நாடி யலைகின்றவர் தலையாய மக்களாகக் கருதப்படாராதலின், “சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன்” என்று கூறுகின்றார். துணிதல் - நினைத்தல். இதுகாறும் பாட்டுத் தோறும் மிகப்பல குற்றங்களை எடுத்துரைத்த வடலூர் வள்ளல் இவையனைத்தும் தம்பால் உள்ளனவோ இல்லையோ என்று நினைத்துப் பார்க்கின்றாராதலால், “இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ” என்று சொல்லி, இப்போது அவருடைய நினைவும் சொல்லும் செயலும் தூயவாய் இருத்தலைக் கண்டு பணிவு தோன்ற மொழிகின்றாராதலால், “இந்த நாள் தூயனாய் நினையே நம்பினேன்” எனவும், இது காரணமாய் என்னைக் கைவிடலாகா தென வேண்டுவாராய், “கைவிடேல் எனையே” எனவும் கட்டுரைக்கின்றார். செய்த குற்றங்களை நீக்குதற்கு இறைவன் திருவருளன்றிப் பிறிது யாதுமில்லை என்பது பற்றி, “இறைவ நின் அருளால் நவையெலாம் தவிர்ந்தேன்” எனக் கூறுகின்றார்.
இதனால், நவை தீர்ந்த தூயனாய் நின்னையே நம்பி இருக்கின்றேனாதலால் என்னைக் கைவிடலாகாதென வடலூர் வள்ளல் விண்ணப்பித்தவாறாம். (28)
|