16. ஆற்ற மாட்டாமை
அஃதாவது, உலகியற் துன்பத்தின் ஆற்றாமையை நினைந்து வருந்தி இறைவன்பால் முறையிடுதல்.
இதன்கண், இறைவன் தம்மைத் தடுத்தாட் கொண்டருளினான் என்றும், “செப்பார் கலைகள் மொழிந்த பொருள் திறங்கள் அனைத்தும் தெரிந்து தெளிந்து இப்பாரிடை நின் புகழ் பாடுகின்ற பெரியரின் மொழிப்பாட்டு ஒப்பாச் சிறியேன் புன்மொழிப் பாட்டெல்லாம் உவந்த உடையானே” என்று வியந்தும், தம்மைப் “புரைசேர் துயரப் புணரி முற்றும் கடத்தி ஞான பூரணமாம் கரை சேர்த்தருளி இன்னமுதக் கடலைக் குடிப்பித்திடல் வேண்டும்” என்றும், “வெப்பார் உள்ளக் கலக்கமெலாம் இற்றைப் பொழுதே விலக்கி ஒழித்து இப்பாரிடை என் கருத்தின் வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்தருள்க” என்றும், இது “ஒப்பால் உரைத் தன்று உண்மையுரைத்தேன்” என்றும், “அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாய்” என்றும் வடலூர் வள்ளலார் கூறுகின்றாரெனப் பதிப்பாசிரியர் பாலகிருஷ்ணபிள்ளை தொகுத்து எழுதுகின்றார்.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 3581. இப்பார் முதல்எண் மூர்த்தமதாய்
இலங்கும் கருணை எங்கோவே
தப்பா யினதீர்த் தென்னையும்முன்
தடுத்தாட் கொண்ட தயாநிதியே
எப்பா லவரும் புகழ்ந்தேத்தும்
இறைவா எல்லாம் வல்லோனே
அப்பா அரசே இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
உரை: இந்நில முதல் எண்வகை மூர்த்தங்களாய் விளங்கும் கருணையுருவாகிய எங்கள் தலைவனே; எத்திறத்தோரும் புகழ்ந்து பரவும் இறைவனே, எல்லாம் வல்லவனே, யான் செய்த தவறுகள் அத்தனையும் போக்கி என்னையும் தீமையில் புகுதா வண்ணம் தடுத்து ஆட்கொண்ட தயாநிதியாகிய சிவனே, அப்பா, அருளரசே, உலகியல் துன்பங்களை இனிச் சிறிதும் பொறுக்க மாட்டேன்; எனக்கு அருள் புரிக. எ.று.
நிலம், நீர், காற்று, தீ, விண், ஞாயிறு, திங்கள், உயிர் ஆகிய எட்டும் இறைவன் உரு என்றும், இவற்றை எண்வகை மூர்த்தம் என்றும் சான்றோர் கூறுதலின், சிவபெருமானை ‘அட்டமூர்த்தி’ என்பது வழக்கு. அதுபற்றி, “இப்பார் முதல் எண் மூர்த்தமாய் இலங்கும் கருணை எம் கோவே” என்று கூறுகின்றார். பரம் பொருளாகிய சிவன் அருள் மிகுதியால் இவ்வெட்டும் ஆனது பற்றி அவனை, “கருணை எங்கோவே” என்று புகழ்கின்றார். இவ்வுலகில் வாழும் மக்களில் எவ்வகைப்பட்டோரும் இறைவனைப் புகழ்ந்து பாடுதலால், “எப்பாலவரும் புகழ்ந்தேத்தும் இறைவா” என்றும், அப்பெருமானால் ஆகாதது ஒன்றுமில்லை என்பது பற்றி, “எல்லாம் வல்லோனே” என்றும் கூறுகின்றார். தப்பு - குற்றம். குற்றமான செயல்கள் தீவினைக் கேதுவாய்ப் பிறவித் துன்பங்களை இடையறாது விளைவித்தலின், “தப்பாயின தீர்த்து” என்றும், தவறான நெறிகளில் செல்லும் அறிவையும் மனத்தையும் தடுத்துச் சிவநெறிக்கண் செல்லுமாறு தன்னை யாண்டுகொண்ட அருள் ஆண்மையை வியந்து, “தப்பாயின தீர்த்து” என்றும், தவறான நெறிகளில் செல்லும் அறிவையும் மனத்தையும் தடுத்துச் சிவநெறிக்கண் செல்லுமாறு தன்னை யாண்டுகொண்ட அருள் ஆண்மையை வியந்து, “தப்பாயின தீர்த்து என்னையும் முன் தடுத்தாட் கொண்ட தயாநிதியே” எனச் சாற்றுகின்றார். முன் என்றது கழிந்த இறந்த காலத்தைக் குறிக்கிறது. இளமை கழிந்து முதுமைநிலை எய்திய போதும் பிறவித் துன்பம் தொடர்ந்து போந்து வருத்தலால், “இனிச் சிறிதும் ஆற்றமாட்டேன்” என அறிவிக்கின்றார்.
இதனால், தடுத்தாட் கொண்ட விடத்தும் துன்பம் இடையறாது வருத்துதலின் ஆற்றா மாட்டாமை விண்ணப்பித்தவாறாம். (1)
|