3582.

     புரைசேர் துயரப் புணரிமுற்றும்
          கடத்தி ஞான பூரணமாம்
     கரைசேர்த் தருளி இன்னமுதக்
          கடலைக் குடிப்பித் திடல்வேண்டும்
     உரைசேர் மறையின் முடிவிளங்கும்
          ஒளிமா மணியே உடையானே
     அரைசே அப்பா இனிச்சிறிதும்
          ஆற்ற மாட்டேன் கண்டாயே.

உரை:

     புகழ் பொருந்திய வேதங்களின் உச்சியில் ஒளி விட்டுத்திகழும் பெரிய மாணிக்க மணி போல்பவனே, என் போன்றாரை அடிமையாக உடைய பெருமானே, அருளரசே, தந்தையே, குற்றம் பொருந்திய உலகியலாகிய துன்பக் கடல் முற்றவும் கடக்கச் செய்து, நிறைந்த ஞானமாகிய சிவலோகமாகிய கரையில் ஏற்றி அங்கு நுகரப்படும் இனிய சிவஞான வமுதமாகிய கடலை அடியவனாகிய யான் குடித்து மகிழச் செய்தல் வேண்டும். எ.று.

     துயரங்கள் தொடர்ந்து போந்து தாக்குதலால் அறிவாற்றல்கள் நலமிழந்து கெடுதலால், உயிரறிவு ஞான பூரணம் எய்தாமல் அலமருதலின், “புரைசேர் துயரப் புணரி முற்றும் கடத்தி” என்றும், நிறைந்த ஞானிகள் அடையுமிடமாதலின் சிவலோகத்தை, “ஞான பூரணமாம் கரை” என்றும், சிவன் திருவருளால் அக்கரையை அடைந்தவர் சிவஞான அமிர்தத்தை பெருகப் பருகுதலால், “சேர்த்தருளி இன்னமுதக் கடலைக் குடிப்பித்திடல் வேண்டும்” என்றும் வேண்டுகிறார். கடத்தி இன்னமுதக் கடலைக் குடிப்பித்திடல் வேண்டும் என்றது, திருவருளாலன்றிக் கடத்தலும் குடித்தலும் நிகழாமை யுணர்த்துகின்றது. எல்லாராலும் புகழப்படுதலின், வேதங்களை “உரைசேர் மறை” என உரைக்கின்றார். வேத ஞானத்தின் முடிபொருளாதல் தோன்றச் சிவபரம்பொருளை, “ஒளி மாமணியே” என்று குறிக்கின்றார்.

     இதனாலும் தமது மாட்டாமையை எடுத்தோதிச் சிவஞானப் பேரின்பத்தை நுகர்தற்கு அருள் புரிக என வேண்டிக் கொண்டவாறாம்.

     (2)