3583. கண்ணார் அமுதக் கடலேஎன்
கண்ணே கண்ணுட் கருமணியே
தண்ணார் மதியே கதிர்பரப்பித்
தழைத்த சுடரே தனிக்கனலே
எண்ணா டரிய பெரியஅண்டம்
எல்லாம் நிறைந்த அருட்சோதி
அண்ணா அரசே இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
உரை: அழகிய அமுதமாகிய கடலே, என் கண் போன்றும் கண்ணின்கண் ணுள்ள அரிய மணி போன்றும் விளங்குகின்ற பெருமானே, குளிர்ந்த முழுமதி போன்றவனே, ஒளி பரப்பி யுலகு எங்கும் பரந்து நிலவும் செஞ்ஞாயிறு போன்றவனே, ஒப்பற்ற தீயின் கனல் போன்றவனே, மனத்தால் எண்ணுதற் கரிய பெரிய அண்ட முழுதும் நிறைந்து விளங்கும் அருளொளி பரப்பும் பரஞ்சோதியே, தலைவனே, அருளரசே, இவ்வுலகில் துன்பத்தை இனி யான் சிறிதும் பொறுக்க மாட்டேன்; அருள் புரிக. எ.று.
கண்ணார் அமுதம் - அழகிய அமுதம். “கண்ணார் கண்ணி” என்றார் போல. கண்ணார் அமுதம் என்றவிடத்துக் கண்ணார் என்ற தொடர் அழகின் மேலதாயிற்று. ஞானக் காட்சிக் கழகாய் அளவிறந்த பெருமையதாய் விளங்குவதால் சிவத்தை, “கண்ணார் அமுதக் கடலே” எனப் புகழ்கின்றார். உறுப்புக்களில் தலைசிறந்து நிற்றல் பற்றி, “என் கண்ணே” என்றும், கண்ணிற்கு ஒளியும் அழகும் கூர்த்த பார்வையும் நல்குவது பற்றி, “கண்ணுட் கருமணியே” என்றும் பாராட்டுகின்றார். தண்ணார் மதி - குளிர்ந்த நிலவைப் பொழியும் முழு மதியம். எங்கும் எப்பொருளிலும் தனது வெயில் ஒளியைப் பரப்பி இருள் போக்கி உயிர்கள் இனிதுறச் செய்தலின் சிவ சூரியனை, “கதிர் பரப்பித் தழைத்த சுடரே” எனப் போற்றுகின்றார். அணுகினாரைச் சுட்டெரிக்காமல் ஞான வொளி தந்து தீயின் நிறம் கொண்டு திகழ்தலால், “தனிக் கனலே” என்று சிறப்பிக்கின்றார். அண்டங்களின்தொகை எண்ணுதற்கரிய அளவிறந்ததாதலின், “எண்ணா டரிய பெரிய அண்டம்” என வுரைக்கின்றார். “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மை வளம் பெருங் காட்சி, ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின், நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” (அண்டப்) என்று மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க. இவ்வண்ட மனைத்தும் தனது அருளொளி நிறைந்து பரவ ஓங்கி விளங்குவது பற்றி, “அண்ட மெல்லாம் நிறைந்த அரு சோதி” என்று கூறுகின்றார். தலைமைப் பொருளதாகிய அண்ணல் என்பது அண்ணா என விளியேற்றது. அண்ணா அரசு என்பதற்கு நெருங்குதற்கு அரிய அரசே என்று பொருள் கூறுதலும் உண்டு.
இதனாலும் உலகியல் துன்பங்களைப் பொறுக்க மாட்டாமை யுணர்த்தியவாறாம். (3)
|