3584.

     பொய்யா தென்றும் எனதுளத்தே
          பொருந்தும் மருந்தே புண்ணியனே
     கையார்ந் திலங்கு மணியேசெங்
          கரும்பே கனியே கடையேற்குச்
     செய்யா உதவி செய்தபெருந்
          தேவே மூவாத் தெள்ளமுதே
     ஐயா அரசே இனிச்சிறிதும்
          ஆற்ற மாட்டேன் கண்டாயே.

உரை:

     ஐயனே, அருளரசே, என்னுடைய உள்ளத்தில் நீங்காது என்றும் வீற்றிருக்கின்ற ஞானாமிர்தமே, புண்ணியப் பொருளே, கையகத்தே யிருந்து விளங்கும் மாணிக்க மணி போல்பவனே, செங்கரும்பும் இனிக்கும் கனியைப் போல்பவனே, கடையவனாகிய எனக்குக் கைம்மாறு செய்ய மாட்டாத உதவியைச் செய்த பெரிய தேவதேவனே, முதிர்ந்து கெடாத தெள்ளிய அமுதே, இவ்வுலகில் வாழ்க்கை தரும் துன்பத்தை இனி யான் சிறிதும் பொறுக்க மாட்டேன், காண். எ.று.

     ஒருகால் இருந்து பிறிதொருகால் இல்லாது மறையும் பொய்ப்பொருள் போலாது எனது உள்ளத்தில் எப்பொழுதும் வீற்றிருக்கின்ற பெருமானே என்பார், “பொய்யாதென்றும் எனது உளத்தே பொருந்தும் மருந்தே” என்று உரைக்கின்றார். மெய்ம்மை யின்ப வாழ்வு நல்குவது பற்றிச் சிவனை, “மருந்து” என்கின்றார். சிவ புண்ணிய மூர்த்தமாதலின், “புண்ணியனே” எனச் சிறப்பிக்கின்றார். கையார்ந் திலங்கும் மணி. அங்கையில் இருந்து இன்ப வொளி செய்யும் மாணிக்க மணி. கைம்மாறு செய்ய மாட்டாத உதவி செய்யா உதவி எனப்படுகிறது. யாதொரு நன்றியும் செய்தறியாது இருக்கவும் செய்யப்படும் உதவி என்னும் அதைச் செய்த அருளை வியந்து, “செய்யா உதவி செய்த பெருந் தேவே” என்று தெரிவிக்கின்றார். கேவலத்தில் ஆணவ விருளில் செயலற்றுக் கிடந்த ஆன்மாவுக்குச் சகலத்தில் உடல் கருவி கரணங்களையும், உலகு போகங்களையும் உதவி, ஞானத்தால் உய்தி பெற அருளினமை பற்றி இவ்வாறு கூறுகின்றார் என்றுமாம். அமுதமாயினும் முதிர்ந்த வழிக் கெடுவதாக, முன்னைப் பழம் பொருளாய் எக்காலத்தும் இன்ப ஞான அமுதமாய் இலங்குவது பற்றிச் சிவனை, “மூவாத் தெள்ளமுது” என்று கூறுகின்றார். மூவாமை - பழம்பொருளாகிக் கெடாமை. தொடர்ந்து தாக்கும் துன்ப மிகுதி பொறாமை தோன்ற, “இனிச் சிறிதும் ஆற்ற மாட்டேன்” என இயம்புகின்றார்.

     இதனாலும் உலகியல் துன்பத் தாக்குதலைத் தாங்க மாட்டாமை எடுத்தோதியவாறாம்.

     (4)