3585.

     இத்தா ரணியில் என்பிழைகள்
          எல்லாம் பொறுத்த என்குருவே
     நித்தா சிற்றம் பலத்தாடும்
          நிருத்தா எல்லாஞ் செயவல்ல
     சித்தா சித்தி புரத்தமர்ந்த
          தேவே சித்த சிகாமணியே
     அத்தா அரசே இனிச்சிறிதும்
          ஆற்ற மாட்டேன் கண்டாயே.

உரை:

     தந்தையே, அருளரசே, இந்நில வுலகில் யான் செய்த பிழைகள் எல்லாவற்றையும் பொறுத்தருளிய என்னுடைய ஞான குருவே, என்றுமுள்ள மெய்ப் பொருளே, தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் கூத்தப் பிரானே, எவ்வகைச் செயல்களையும் செய்ய வல்ல சிந்தையை யுடையவனே, சித்தி புரத்தில் எழுந்தருளும் தேவனே, என் சித்தத்தில் இருந்தருளும் சிகாமணியே, இவ்வுலகியல் துன்பத்தை இனியும் யான் சிறிதும் தாங்க மாட்டேன், காண். எ.று.

     தாரணி - நில வுலகம். செய்பிழைகளைப் பொறுத்தாலன்றிக் குருபரனுக்கு ஞானம் நல்கும் அருள் உள்ளம் பிறவா தாகையால், “என் பிழைகள் எல்லாம் பொறுத்த என் குருவே” என இயம்புகின்றார். நித்தன் - என்றும் உள்ளவன். சிற்றம்பலம் - தில்லையிலுள்ள பொற்சபை. நிருத்தன் - கூத்தாடும் பெருமான். எச்செயலையும் செய்ய வல்ல மனத்திட்பம் உடையவன் என்றற்கு, “எல்லாம் செயவல்ல சித்தா” என்று தெரிவிக்கின்றார். சித்தி புரம் - வடலூரில் சத்திய ஞான சபை யிருந்து விளக்கமுறும் இடமாகும். மனத்தினை யிடமாகக் கொண்டு திகழ்பவனாதலால் சிவனைச் “சித்த சிகாமணி” என்கின்றார். சித்தி எல்லாம் வல்ல சித்தர்களுக்கு முடிமணியாகத் திகழ்பவன் என்று கூறினும் பொருந்தும். உலகியல் துன்ப மிகுதி விளங்க இனியும் சிறிதும் பொறுக்க மாட்டேன் என்பாராய், “இனிச் சிறிதும் ஆற்ற மாட்டேன்” என உரைக்கின்றார்.

     இதனாலும் துன்ப மிகுதி புலப்படத் தாங்க மாட்டாமை சாற்றியவாறாம்.

     (5)