3586.

     எம்மே தகவும் உடையவர்தம்
          இதயத் தமர்ந்த இறையவனே
     இம்மே தினியில் எனைவருவித்
          திட்ட கருணை எம்மானே
     நம்மே லவர்க்கும் அறிவரிய
          நாதா என்னை நயந்தீன்ற
     அம்மே அப்பா இனிச்சிறிதும்
          ஆற்ற மாட்டேன் கண்டாயே.

உரை:

     என்னை விரும்பி இவ்வுலகில் பிறப்பித் தளித்த அம்மையே, அப்பனே, எத்தகைய மேதக்கவராயினும் அவரது இதயத்தின்கண் எழுந்தருளுகின்ற இறைவனே, இம்மண்ணுலகில் என்னைத் தோற்றுவித்தருளிய கருணை யுருவாகிய என் தலைவனே, நம்மவருள் மேலாயினார் யாவராலும் அறிய மாட்டாத நாதனே, இப்பிறவித் துன்பத்தை இனிச் சிறிதும் பொறுக்க மாட்டேன், காண். எ.று.

     மேதகவு - மேம்பாடு. மேம்பட்ட பண்பும் செயலும் உடையவரை மேதக்கவன் என்று வழங்கும் உலகியல் பற்றி, “எம்மேதகவும் உடையவர்” என இயம்புகின்றார். மேதக்கவருடைய மேன்மைகளில் தலையாது திருவருள் ஞான முடைமையாதலின், திருவருட் சிவஞானகளை “மேதகவுடையவர்” எனப் பாராட்டுகின்றார். அவருடைய திருவுள்ளமே இறைவனுக்கு கோயிலாதலின், “இதயத் தமர்ந்த இறைவயவனே” எனக் கூறுகின்றார். உயிர்களை யுலகில் உடம்பொடு கூடிப் பிறப்பித்தல் சிவனது அருட் செயலாதல் பற்றி, “இம்மேதினியில் எனை வருவித்திட்ட கருணை எம்மானே” எனப் புகழ்கின்றார். நம் மேலவர் - நம்முடைய மக்களினத்தில் கல்வி யறிவு ஒழுக்கங்களால் உயர்ந்தவ ரென்ற பொருள்பட, “நம் மேலவர்” என்று கூறுகின்றார். நகரத்தைச் சிறப்புணர்த்தும் இடைநிலையாகக் கொண்டு நக்கீரர், “நப்பின்னை” என்றார் போல ‘நம் மேலவர்’ என நவில்கின்றார் எனினும் அமையும். பசுபாச ஞானங்களால் அறியப் படாமை பற்றி, “அறிவரிய நாதா” என்று கூறுகின்றார். தன்னை யுலகில் பிறப்பித்து அறிவறிந்து ஒழுகுமாறு பண்ணிய நலம் பற்றிச் சிவபெருமானை, “அம்மே அப்பா” என அன்பு செய்கின்றார்.

     இதனாலும் உலகியல் துன்பத்தைத் தாங்க மாட்டாமை தெரிவித்துக் கொண்டவாறாம்.

     (6)