3587.

     செப்பார் கலைகள் மொழிந்தபொருள்
          திறங்கள் அனைத்துந் தெரிந்துதெளிந்
     திப்பா ரிடைநின் புகழ்பாடு
          கின்ற பெரிய ரின்மொழிப்பாட்
     டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட்
          டெல்லாம் உவந்த உடையானே
     அப்பா அரசே இனிச்சிறிதும்
          ஆற்ற மாட்டேன் கண்டாயே.

உரை:

     இந்நிலவுகின்கண் கற்றவர்களால் உயர்த்திப் பேசப்படும் நூல்கள் சொல்லிய பொருள் வகைகள் அனைத்தையும் நன்கு தெரிந்து உள்ளத்தில் தெளிந்து நின்னுடைய புகழ்களை ஞானசம்பந்தர் முதலிய பெரியோர்களின் இன்சொற்களாலாகிய பாட்டுக்களுக்கு ஒப்பச் சிறியேன் புல்லிய சொற்களால் பாடிய பாட்டுக்கள் எல்லாவற்றையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு எம்மையும் அடிமையாக யுடையவனே, அப்பனே, அருளரசே, இவ்வுலகியல் துன்பத்தை இனிச் சிறிதும் பொறுக்க மாட்டேன் காண். எ.று.

     செப்பார் கலைகள் - அறிந்தோரால் உயர்த்திப் புகழப்படும் பல்வகைக் கலைகளை யுணர்த்தும் நூல்கள். கலை நூற் பொருளும், உலகியல் பொருள்களும், ஞானநூற் பொருள்களும் எல்லாவற்றையும் கசடறக் தெரிந்த மேலோராதலின், ஞானசம்பந்தர் முதலிய பெருமக்களை, “செப்பார் கலைகள் மொழிந்த பொருள் திறங்கள் அனைத்தும் தெரிந்து தெளிந்து இப்பாரிடை நின் புகழ் பாடுகின்ற பெரியர்” என்று புகழ்கின்றார். அப்பெருமக்கள் பாடியருளிய திருப்பாட்டுக்களைப் பலகாலும் ஓதி யுணர்ந்தமையின் வடலூர் வள்ளல், அவர்களைப் போலத் தாமும் சிவனைப் பாடி மகிழும் விருப்புடையராயினமை புலப்பட, “பெரியரின் மொழிப்பாட் டொப்பாச் சிறியேன் புன்மொழிப் பாட்டெல்லாம்” என இயம்புகின்றார். ஞானசம்பந்தர் முதலிய பெரியோர் திருவருளால் பெருமை யுடையராதலின், அவரை நோக்கத் தம்மைச் ‘சிறியேன்’ என்றும், அவர்களுடைய இன்மொழிப் பாட்டுக்களை நோக்கத் தாம் பாடியன வெல்லாம் புன்மொழிகளாகப் புலப்பட, “சிறியேன் புன்மொழிப் பாட்டெல்லாம்” என்றும், அவற்றையும் இறைவன் ஏற்றுக் கொண்டான் என்ற கருத்துத் தோன்ற, “சிறியேன் புன்மொழிப் பாட்டெல்லாம் உவந்த உடையானே” என்றும் உரைக்கின்றார்.

     இதனாலும் உலகியல் துன்பங்களைத் தான் பொறுக்க மாட்டாமையை வடலூர் வள்ளல் தெரிவித்தவாறாம்.

     (7)