3588. துப்பார் கனகப் பொதுவில்நடத்
தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும்
வைப்பாம் இறைவா சிவகாம
வல்லிக் கிசைந்த மணவாளா
ஒப்பார் உயர்ந்தார் இல்லாத
ஒருவர் எல்லாம் உடையானே
அப்பா அரசே இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
உரை: சிவந்த பொற் சபையில் நிகழ்த்தும் திருக்கூத்தால் உலக மக்களின் துன்பத்தைப் போக்கும் நல்லிடமாகிய இறைவனே, சிவகாமவல்லிக்குப் பொருத்தமான மணவாளனே, ஒப்பாரும் உயர்ந்தாருமில்லாத ஒருவனே, எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனே, அப்பனே, அருளரசே, இவ்வுலகியல் துன்பத்தை இனியும் சிறிதும் பொறுக்க மாட்டேன், காண். எ.று.
துப்பு - செம்மை நிறம். பவளத்தின் நிறம் சிவப்பாதலின் தில்லைப் பொற் சபையிடத்துப் பொன்னை, “துப்பார் கனகம்” என உயர்மொழிக்கிளவியால் உவந்து உரைக்கின்றார். தில்லைப் பொற் சபையில் இறைவன் ஆடுகின்ற திருக்கூத்து மலவிருளில் அழுந்திக் கிடக்கும் ஆன்மாக்களை மும்மலங்களினின்றும் நீக்கித் திருவருள் இன்பத்தில் தோய்ந்து இன்புறுவிக்கும் கருத்துடையராதலால், “நடத் தொழிலால் உலகத் துயர் ஒழிக்கும் வைப்பாம் இறைவா” என இயம்புகின்றார். வைப்பு - ஈண்டுச் சிவானந்த நிலையத்தின் மேற்று. தில்லையில் அம்பிகையின் திருப்பெயராதலின், சிவகாமவல்லி என்கின்றார். சிவத்தினின்றும் பிரியாது உடன் உரையும் பெருமாட்டியாதலின், உமாேதவியைச் சிவகாமவல்லியைத் திருமணத்தால் தேவியாகக் கொண்டமை விளங்க, “சிவகாமவல்லிக்
கிசைந்த மணவாளா” எனச் சிறப்பிக்கின்றார். சிவனுக்கு ஒப்பாரும் உயர்ந்தவரும், எவ்வுலகத்தும் எத்தகையவருள்ளும் ஒருவரும் இல்லாமை தோன்ற, சிவனை “ஒருவன்” என்று உயர்ந்தோர் உரைப்பது மரபு. “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” (அண்டப்) என்பது திருவாசகம். இம்மரபு பற்றியே “ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவர்” என்று உரைக்கின்றார். உலகிலுள்ள உயிர்ப் பொருள் அனைத்தையும் தனக்கு அடிமையாகவும், உயிர்கள் பொருள்கள் அத்தனையும் தனக்கு உடைமையாகவும் கொண்டவனாதலால், சிவபெருமானை “எல்லாம் உடையானே” என ஏத்துகின்றார்.
இதனாலும் உலகியல் துன்பத்தைப் பொறுக்க மாட்டாமை தெரிவித்தவாறாம். (8)
|