3589. ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக்
கெனமா மறைகள் ஓலமிடும்
துப்பார் வண்ணச் சுடரேமெய்ச்
சோதிப் படிக வண்ணத்தாய்
வெப்பா னவைநீர்த் தெனக்கமுத
விருந்து புரிதல் வேண்டும்என்றன்
அப்பா அரசே இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
உரை: அப்பனே, அருளரசே, நினது பெருமைக்கு ஒப்பு ஒருவராலும் கூற முடியாது எனப் பெரிய வேதங்கள் முழங்குகின்றன; பவள நிறச் சுடராகியவனே, மெய்ம்மை ஒளியால் படிக நிறத்தை யுடையவனே, வெம்மை தருவனவற்றை விலக்கிச் சிவாமிர்தமாகிய விருந்தினை எனக்கருளுதல் வேண்டும்; இவ்வுலகில் துன்பத்தை இனிச் சிறிதும் பொறுக்க மாட்டேன் காண். எ.று.
ஞான நூல்களில் தலையாய வேதங்களால் சிவபெருமான் தனக்கு ஒப்பு ஒருவரும் இல்லாதவன் எனப் போற்றப்படுவது பற்றி, “ஒப்பார் உரைப்பார் நின் பெருமைக்கு என மாமறைகள் ஓலமிடும்” என்று கூறுகின்றார். சிவ மூர்த்தம் செம்பவளச் செந்நிறம் கொண்டு திகழ்தலால், “துப்பார் வண்ணச் சுடர்” என்றும், பர சுகத்தின் ஞான வொளி வெண்மை நிறமுடையதாதலின், “மெய்ச் சோதிப் படிக வண்ணத்தாய்” என்றும் விளம்புகின்றார். துப்பார் வண்ணம் - பவளத்தின் செந்நிறம். வெவ்விய துன்பம் தருவனவற்றை “வெப்பானவை” என்று கூறுகின்றார். இதனால் பிறவித் துன்பத்தின் கொடுமை சுட்டியவாறாம். சிவனது திருவருள் இன்பம் தண்ணிதாய்ப் புத்தின்பம் தந்த வண்ணம் இருப்பதாகலின், “அமுத விருந்து புரிதல் வேண்டும்” என உரைக்கின்றார். “விமுத வல்ல சடையான் வினை யுள்குவார்க்கு அமுத நீழல் அகலாததோர் செல்வமாம்” (கருகா) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க.
இதனாலும் உலகியல் துன்பத்தை ஆற்ற மாட்டாமை உரைத்தவாறாம். (9)
|