3590. வெப்பார் உள்ளக் கலக்கமெலாம்
இற்றைப் பொழுதே விலக்கிஒழித்
திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம்
எல்லாம் விரைவின் ஈந்தருள்க
ஒப்பால் உரைத்த தன்றுண்மை
உரைத்தேன் கருணை உடையானே
அப்பா அரசே இனிச்சிறிதும்
ஆற்ற மாட்டேன் கண்டாயே.
உரை: கருணையாகிய செல்வத்தை யுடைய பெருமானே, அப்பனே, அருளரசே, வெம்மை பொருந்திய மனக் கலக்க மெல்லாம் இப்பொழுதே நீக்கிக் கெடுத்து இவ்வுலகின்கண் நான் கருதிய கருத்துக்கள் எல்லாவற்றையும் விரைந்து நிறைவு செய்தருள்க; நான் ஒப்புக்கு உரைத்தேன் என்று கொள்ளாமல் உண்மையை உள்ளபடியே உரைத்ததாக ஏற்றுக் கொள்ளல் வேண்டும்; என்னைத் தாக்கும் உலகியல் துன்பங்களை இனியும் சிறிதும் பொறுக்க மாட்டேன் காண்க. எ.று.
மனத்தில் கவலைகள் மிகுந்து வருத்துகிற பொழுது உடலகம் எங்கும் வெப்பம் மிகுதலின், “வெப்பார் உள்ளக் கலக்கம்” என விளம்புகிறார். மனக்கவலை நீடித்த வழி அறிவு தெளிவிழத்தலின், “இற்றைப் பொழுதே விலக்கி” என்றும், சிறிது எஞ்சிய வழித் தீ யெச்சம் போலப் பெருகித் துன்புறுத்துமாதலின், “ஒழித்து” என்றும் உரைக்கின்றார். கருதியன கருதியவாறு கைவந்த வழி கவலையனைத்தும் கெடு வதியல்பாதலின், “என் கருத்தின் வண்ணம் எல்லாம் விரைவில் ஈந்தருள்க” என வேண்டுகின்றார். ஒப்பா ருரைத்தல் - காணும் உலகவர் தகும் என்னுமாறு உரைத்தல். திருவருட் செல்வனாதலின், சிவபெருமானைக் கருணைக்கு உடையவனாகவும், கருணையை உடைமையாகவும் வைத்துப் பேசுகிறார்.
இதனால், உலகியல் துன்பத்தை இனியும் பொறுக்க மாட்டாமை கூறியான் வேண்டியதை வேண்டியவாறு அருளுக என விண்ணப்பித்தவாறாம். (10)
|