17
17. வாதனைக் கழிவு
அஃதாவது,
உலகியல் துன்பத் தாக்குதலால் உள்ளத்து ஊக்கமிழந்து இறைவன்பால் முறையிடுதல்.
இதன்கண், தமது முறையீடு
இறைவன் திருச்செவிக்கு எட்டவில்லையா என்றும், இறைவன் தம்மை இந்நாள் முகமறியார் போலிருந்தால்
தமக்கு எங்கோ புகலிடம் என்றும், இன்னும் நரகக் கடுங்கடையில் பயந்த பொழுதும் அருள் தரத் தாழ்த்தால்
தம்முயிர் ஒருவும் என்றும், அஃது அருளுக்கு அழகன்று என்றும், அடியார்கள் சிரிக்கும் தன்மைத்து என்றும்,
தமக்கு அருள் ஈந்தால் குற்றம் புரிந்தோரையும் இறைவன் காப்பாற்றினான் என்று பெரியோர்கள்
புகழ்வர் என்றும், தெரிந்த பெரியார்க்கு அருள் புரிதலினும் சிறியர்க்குப் புரிதல் சிறப்பிற்
சிறப்பென்று உரைத்தனவே மறை அம்மறையைப்; புகன்றவனும் நீயே என்றும், தமது ஒன்பதாம் ஆண்டில்
தம்மை இறைவன் ஆட்கொண்டருளினான் என்றும் இறைவன் இன்னும் அருளினால் தடுப்பவ ரிலர் என்றும்,
அருளாவிடில் வேறு யாரும் அருள் தரற்கு உரிய ரல்லர் என்றும், இருள் நாடுலகில் இனியும் இருக்கத்
தரியேன் என்றும், “சிவமே நின்னைத் தெரிந்து கொண்டு புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும்,
புன்மை யறிவால் பொய் யுரைத்தே இகழ்ந்தோன்தனைக் கீழ் வீழ்த்திடவும், என்னே புவிக்கு இங்கு
இசைத்திலை” என்றும், இறைவன் தம் பிழை பொறுத்துச் சன்மார்க்க நெறி விளங்கத் தம்மைக்
கலந்து நிறைந்தான் என்றும், தாம் இறவாமை பெற்றேன் என்றும், இறைவன் தம்மைப் “பெருங்
கருணைத் தொட்டி லிடத்தே அமர்த்தி அகமே விளங்கத் திருவருளால் அமுதம் தெளித்தே அணைத்தருளி
முகமே மலர்த்திச் சித்திநிலை முழுதும் கொடுத்து மூவாமல் சகமேல் இருக்கப் புரிந்தான்” என்றும்,
இறைவன் அருள் தந்தான், இன்றும் தருகின்றான், மேலும் தருவான் என்றும், ஊனே புகுந்து தம்முளம்
கலந்த இறைவனுக்குக் கைம்மாறு அளித்தற் கில்லை என்றும், வடலூர் வள்ளல் கூறுகின்றார். எனத் திரு.
பாலகிருஷ்ண பிள்ளையவர்கள் தொகுத்து எழுதுவது காண்க. இதன்கண் வரும் பாட்டு இருபதும் அந்தாதித்
தொடையில் அமைந்து பொழுது எனத் தொடங்கி பொழுது என முடிகின்றது.
அறுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
3591. பொழுது விடிந்த தினிச்சிறிதும்
பொறுத்து முடியேன் எனநின்றே
அழுது விழிகள் நீர்தளும்பக்
கூவிக் கூவி அயர்கின்றேன்
பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள்
பட்ட திலையோ பலகாலும்
உழுது களைத்த மாடனையேன்
துணைவே றறியேன் உடையானே.
உரை: எல்லாமுடைய பெருமானே, இரவெல்லாம் துன்புற்றுக் கிடந்த எனக்குப் பொழுது விடிந்தும் அது நீங்காமையால் இனிச் சிறிது பொழுதும் பொறுக்க மாட்டேன் என்று சொல்லி நின் திருமுன் நின்று கண்களில் நீர் நிறைந் தொழுக அழுதும், நின்னைக் கூவி அரற்றியும் சோர்கின்றேன்; துன்பம் துடைக்கும் உன்னுடைய திருச்செவியில் என்னுடைய அழுகுரல் கேட்க வில்லையோ; பலமுறையும் நிலத்தை உழுது மெலிவுற்ற மாடு போன்ற யான், உன்னைத் தவிர துணையாவர் வேறு ஒருவரையும் காணேன்; நின் திருவருளை அளித்தருள்க. எ.று.
பொழுது விடிந்தது என்றதனால் இரவெல்லாம் உறக்கமின்றி வருந்தினமை பெற்றாம், இனிச் சிறிதும் பொறுத்து முடியேன் என்றதனால் இரவு முழுதும் துன்பத்தால் வருந்தினமை பெறப்படும். அழுது அரற்றுமிடத்துக் கண்கள் நீர் சுரந்து சொரிதலின், “அழுத விழிகள் நீர் தளும்ப” என்றும், அரற்றிய திறம் புலப்பட, “கூவிக் கூவி அயர்கின்றேன்” என்றும் இயம்புகின்றார். துன்புற்று வருந்துவோர் துயர் சொல்லி முடிப்பதற்குள் அத்துயர்க்கு ஏதுவாகிய குற்றத்தைப் போக்கும் அருளாளனாதலின், சிவ பெருமானை நோக்கிப் “பழுது தவிர்க்கும் திருச் செவிக்குள் பட்டதிலையோ” எனப் பகர்கின்றார். பலகாலும் உழுத எருது சோர்வுறுதல் கண்கூடாதலின், பன்முறையும் துன்புற்றுச் சோர்ந்த தமக்கு அதனை உவமம் செய்கின்றார். நின்னையன்றி அமையேனாதலின் எனக்கு வேறு துணையில்லை என்றற்கு “துணை வேறறியேன் உடையானே” என்று கூறுகின்றார். பலாகலும் அழுதரற்றி முறையிட்டும் திருவருள் எய்தாமையின் வேறு துணையினை நினைக்கும் நிலைமை பிறந்தமை தோன்ற, “துணை வேறறியேன்” என்று சொல்லுகின்றார்.
இதனால், வேட்ட பொழுதில் திருவருள் விரைந்து எய்தாமைக்குத் துணிவுற்று வேறு துணை யறியேன் என்று சொல்லியவாறாம். (1)
|