3592.

     உடையாய் திருஅம் பலத்தாடல்
          ஒருவா ஒருவா உலவாத
     கொடையாய் எனநான் நின்றனையே
          கூவிக் கூவி அயர்கின்றேன்
     தடையா யினதீர்த் தருளாதே
          தாழ்க்கில் அழகோ புலைநாயிற்
     கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம்
          மதமோ கருணைக் கருத்தினுக்கே.

உரை:

     என்னை அடிமையாக வுடைய பெருமானே, தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற ஒருவனே, என்றும் நீங்குதலும் குறைதலுமில்லாத அருட் கொடையை யுடையவனே என்று நான் நின்னையே நோக்கிக் கூவிக் கூவி அழைத்துச் சோர்வுறுகின்றேன்; என் முயற்சிக்குத் தடை ஆகியவற்றைத் தீர்ப்பதின்றிக் கால தாமதம் செய்குவது உனக்கு அழகாகுமோ; நாயினும் கடைப்பட்டவனாய் உலகியலில் திரிந்து நான் மனம் கலங்குவது உன்னுடைய அருள் நிறைந்த திருவுள்ளத்திற்கு இசைவாகுமோ கூறுக. எ.று.

     உயிர்வகை யனைத்தையும் தனக்கு அடிமையாக யுடைய பெருமானாதலால், சிவனை, “பெருமான்” என்கின்றார். தில்லைப் பொன்னம்பலத்தில் உயிர்கள் உய்திபெறும் பொருட்டு ஒப்பற்ற திருக்கூத் தாடுகின்றானாதலால், “திருவம்பலத்தாடல் ஒருவா” என வுரைக்கின்றார். “ஒருவா உலவாத கொடையாய்” எனபதில் ஒருவல் - நீங்குதல். உவத்தல் - குறைதல். பிற தேவதேவர்களை நோக்காமல் உன் திருவருள் ஒன்றனையே நோக்கி உன்னைப் பலகாலும் கூவியழைத்து நினது அருள் எய்தாமையால் சோர்வடைகின்றேன் என்பாராய், “நான் நின்றனையே கூவிக் கூவி அயர்கின்றேன்” என்கின்றார். திருவருட் பேற்றிற்காக நான் செய்யும் முயற்சிகள் பலவும் பல்வேறு தடைகளை யுற்று அதனைப் பெறாவாறு கால தாமதம் செய்வதால் நலமொன்றும் உனக்கு எய்துவதாக எனக்குத் தோன்றவில்லை என வருத்தமுற்று, “தடையாயின தீர்த் தருளாதே தாழ்க்கில் அழகோ” என்றும், அருட் பேறும் தெளிவும் இன்றி நாயினும் கீழ்மையுற்று மனம் கலங்கி நான் வாடி வருந்தக் காண்பது நின்திருவுள்ளத்துக்கு உடன்பாடு ஆகுமா என நொந்து கூறலுற்று, “புலை நாயிற் கடையாய்த் திரிந்தேன் கலங்குதல் சம்மதமோ கருணைக் கருத்தினுக்கே” என்றும் அவலிக்கின்றார். புலை நாய் - புலாலுண்ணும் நாய். புலைச் சேரியில் உழலும் நாய் எனினும் அமையும். சம்மதம் - உடன்பாடு. கருணை நிறைந்த உள்ளம் உடையவனாதலின் நான் வாடி வருந்துவதைக் காண விரும்பாது என வற்புறுத்தற்கு, “கருணைக் கருத்தினுக்குச் சம்மதமோ” என்று கூறுகின்றார்.

     இதனால், திருவருட் பேற்றுக்குத் தாம் செய்யும் முயற்சிக்கு ஊறு செய்யும் தடைகளைத் தீர்த் தருளாமை நன்றன்று என விண்ணப்பித்தவாறாம்.

     (2)