3593. கருணைக் கருத்து மலர்ந்தெனது
கலக்க மனைத்துந் தவிர்த்தேஇத்
தருணத் தருளா விடில்அடியேன்
தரியேன் தளர்வேன் தளர்வதுதான்
அருணச் சுடரே நின்னருளுக்
அழகோ அழகென் றிருப்பாயேல்
தெருணற் பதஞ்சார் அன்பரெலாம்
சிரிப்பார் நானும் திகைப்பேனே.
உரை: சிவந்த சுடர் போன்ற திருமேனியை யுடைய பெருமானே, அருள் நிறைந்த திருவுள்ளம் கருணையால் விரிந்து என்னுடைய மனக் கலக்கங்கள் அத்தனையும் போக்கி இச்சமயத்தில் நினது திருவருள் நலத்தை நல்காவிடில் அடியவனாகிய யான் உற்று வருந்தும் துன்பத்தைப் பொறுக்காமல் தளர்ந்து ஒழிவேன்; யான் இவ்வாறு தளர்வது உன்னுடைய பேரருளுக்கு அழகாகாது; அழகே என்று வாளா இருப்பாயானால் ஞான நலம் சிறந்த நின் திருவடியைச் சார்கின்ற மெய்யன்பர்கள் எல்லாம் உன்னையும் என்னையும் கண்டு நகைப்பார்கள்; நானும் திகைத்து வருந்துவேன். எ.று.
அருணச் சுடர் - சிவந்த தீச்சுடர். கருணைக் கருத்து - கருணை நிறைந்த திருவுள்ளம். மலர்தல் - விரிதல். தருணம் - சமயம். என் மனக் கலக்கத்தைப் போக்குதற் கரிய சமய மறிந்து போக்கி அருளாவிடில் எய்தக் கடவ துன்பங்களை யான் சிறிதும் பொறுக்க மாட்டேன் என்பாராய், “கலக்க மனைத்தும் தவிர்த்தே இத்தருணத் தருளாவிடில் அடியேன் தரியேன் தளர்வேன்” எனச் சாற்றுகின்றார். தன்னைச் சார்ந்த அடியார்கள் துன்ப மேலீட்டால் தளர்வு மிக்கு வருந்தக் காண்பது தலைமைப் பெருமானாகிய நினது அருள் நலத்துக்கு ஒருகாலும் அழகு தாராது என்பாராய், “அடி தளர்வதுதான் நின்னருளுக்கு அழகோ” என்றும், அங்ஙனம் இருந்த வழி உளதாகும் விளைவு இது வென்பார், “அழகு என்றிருப்பாயேல் தெருணற் பதஞ்சார் அன்பரெலாம் சிரிப்பார் நானும் திகைப்பேனே” என்றும் கூறுகின்றார். தெருள் - சிவஞானத் தெளிவு. பதம் - திருவடி. பதஞ்சார் அன்பர் - நின் திருவடியல்லது பிறிது யாதும் சிந்தியாது ஒழுகும் மெய்யன்பர். திகைத்தல் - செயலறுதல்.
இதனால், தமக்குற்ற மனக் கலக்கத்தைப் போக்குதல் வேண்டுமென ஏதுக் காட்டி வற்புறுத்தவாறாம். (3)
|