3594.

     திகைப்பார் திகைக்க நான்சிறிதும்
          திகையேன் எனநின் திருவடிக்கே
     வகைப்பா மாலை சூட்டுகின்றேன்
          மற்றொன் றறியேன் சிறியேற்குத்
     தகைப்பா ரிடைஇத் தருணத்தே
          தாராய் எனிலோ பிறரெல்லாம்
     நகைப்பார் நகைக்க உடம்பினைவைத்
          திருத்தல் அழகோ நாயகனே.

உரை:

     நாயகனே, என் திகைப்பைக் கண்டு அன்பர்கள் பலரும் திகைப்பாராயினும் நான் சிறிதும் திகைக்க மாட்டேன் என்று நின் திருவடிக்கண் பல்வகைப் பாமாலைகளைத் தொகுத் தணிகின்றேன்; வேறு செயல் வகை யொன்றும் யான் அறியேன்; அறியாமையால் சிறுமை யுடைய எனக்கு இவ்வுலகின்கண் இப்பொழுதே நின் திருவருட் பேற்றால் எய்தும் தகைமையினை நல்காயாயின் பிறரெல்லாம் என்னைக் கண்டு நகைப்பார்கள்; பிறர் நகைக்கும் அளவிற்கு இவ்வுடம்பினைச் சுமந்திருத்தல் அழகாகா தன்றோ. எ.று.

     அன்பர்கள் வருந்தக் கண்டும் நீ அருளாது இருப்பது மெய்யன்பர்களுக்கு மனத்தின்கண் திகைப்பை யுண்டு பண்ணும் என்பார், “திகைப்பார் திகைக்க” என்றும், அப்பெருமக்கள் திகைப்பினும் யான் திகைப்புறாது நின் திருவடியே பொருளாகக் கொண்டு பல்வேறு வகைச் சொல் மாலைகளைப் பாடி யணிந்து பரவுவேன் என்பாராய், “நின் திருவடிக்கே வகைப் பாமாலை சூட்டுகின்றேன்” என்றும் இயம்புகின்றார். இவ்வாறு திருவடியே பொருளாகப் பல்வகைப் பாமாலைகளைப் பாடுவதன்றி வேறு செயலறியாத சிறுமை யுடையேன் என்றற்கு, “மற்றொன்றறியேன் சிறியேன்” எனக் கூறுகின்றார். தகை - திருவருட் பேற்றால் விளையும் ஞானப் பெருமை. இத்தருணத்தே தகை தாராய் எனின் என இயையும். சொல்மாலைகள் பல பாடித் தொடுத்தும் அருள் ஞானப் பேறு இல்லை யெனின் அறிஞர் உலகம் என்னைக் கண்டு நகைக்கும் என்பார், “பிற ரெல்லாம் நகைப்பார்” என நவில்கின்றார். பிறர் கண்டு எள்ளி நகைக்க வாழ்வது நல்வாழ்வாகா தென்ற உலகியல் அறத்தை எடுத்தோதி அருள் நல்குமாறு வற்புறுத்துகின்றாராதலின், “நகைக்க உடம்பினை வைத்திருத்தல் அழகோ” என்று சொல்லி வருந்துகின்றார்.

     இதனால், பாடும் பரிசு ஒன்றே யுடையனாதலின் எனக்கு நீ அருள் நல்காவிடில் என்னைப் பலரும் இகழ்ந்து நகைப்ப ரென அருட் பேற்றை வலியுறுத்தவாறாம்.

     (4)