3595.

     நாயிற் கடையேன் கலக்கமெலாம்
          தவிர்த்து நினது நல்லருளை
     ஈயிற் கருணைப் பெருங்கடலே
          என்னே கெடுவ தியற்கையிலே
     தாயிற் பெரிதும் தயவுடையான்
          குற்றம் புரிந்தோன் தன்னையும்ஓர்
     சேயிற் கருதி அணைத்தான்என்
          றுரைப்பா ருனைத்தான் தெரிந்தோரே.

உரை:

     கருணை நிறைந்த பெரிய கடல் போன்ற பெருமானே, நாயினும் கடைப்பட்டவனாகிய எனது மனவருத்தம் எல்லாவற்றையும் போக்கி நல்லதாகிய உனது திருவருளை எனக்கு அளிப்பாயாயின் உனக்கு நட்டமாவது யாதாம்; இயல்பாகவே தாயினும் சிறந்த தயாவுடையவனாகிய சிவபெருமான், குற்றம் செய்தவனையும் ஒரு குழவியாகக் கருதித் தன் அருளில் சேர்த்துக் கொண்டான் என்ற மெய்ம்மை யுணர்ந்தோர் உன்னைப் புகழ்வார் காண்க. எ.று.

     கீழ்மையுற்ற நாயினும் கீழானவன் எனத் தன்னைப் புலப்படுப்பாராய் வடலூர் வள்ளல், “நாயிற் கடையேன்” என நவில்கின்றார். உனது திருவருள் நலத்தை எனக்கு நல்குவாயாயின் அதனால் உனக்கு நட்டமாவது ஒன்றுமில்லை என்பார், “கலக்கமெலாம் தவிர்த்து நினது நல்லருளை ஈயின் என்னே கெடுவது” என்று கூறுகின்றார். இக் கருத்தையே “குன்றே யனைய குற்றங்கள் குணமாம் என்றே நீ கொண்டால் என்தான் கெட்டது இரங்கிடாய்” (குழைத்த) என்று மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க. கெடுவ தொன்று மில்லை யாயினும் உனக்கு மெய்யுணர்ந்தோர் புகழும் புகழ் உண்டாம் என்பார், “இயற்கையிலே தாயிற் பெரிதும் தயை யுடையான் என்று உரைப்பார் உனைத்தான் தெரிந்தோரே” என்று உரைக்கின்றார். “தாயிற் சிறந்த தயாவுடைய தத்துவன்” (சிவபு) என்று மணிவாசகர் முதலிய சான்றோர் பராவுதலின் தாயிற் சிறந்த தயா வுடையான் என்று பராவுகின்றார். தயவு மிக வுடையனாதலின் குற்றம் புரிந்தோர் யாவராயினும் அவர்களைத் தான் பெற்ற சேய் எனக் கருதி ஆதரிக்கின்றான் என்று சிவத்தின் மெய்ம்மை யுணர்ந்தோர் உரைக்கின்றார்கள் என மொழிவாராய், “உரைப்பார் உனைத்தான் தெரிந்தோரே” என ஓதுகின்றார்.

     இதனால், கருணை வள்ளலாகிய சிவபெருமான் எளியோர்க்கு அருள் புரிவதால் எய்தும் சிறப்பை எடுத்துரைத்தவாறாம்.

     (5)