3596. தெரிந்த பெரியர்க் கருள்புரிதல்
சிறப்பென் றுரைத்த தெய்வமறை
திரிந்த சிறியர்க் கருள்புரிதல்
சிறப்பிற் சிறப்பென் றுரைத்தனவே
புரிந்தம் மறையைப் புகன்றவனும்
நீயே என்றால் புண்ணியனே
விரிந்த மனத்துச் சிறியேனுக்
கிரங்கி அருளல் வேண்டாவோ.
உரை: புண்ணிய மூர்த்தியாகிய பெருமானே, ஆய்ந்து கொண்ட பெரியோர்களுக்கு வேண்டுவன வருளுதல் சிறப்புத் தருவதாம் என்று உரைக்கின்ற தெய்வத் தன்மை பொருந்திய வேதங்கள் நன்னெறியினின்றும் மாறிச் சிறுமை யுற்றவர்க்கு அருளாதரவு செய்தல் சிறப்புப் பலவற்றிலுள்ளும் மேன்மை யுடையதாம் என உரைக்கின்றன; அவ் வேதங்களை விரும்பி உலகிற்கு அளித்தவனும் நீயேயாதலால், விரிந்த மனதை யுடைய சிறியவனாகிய எனக்கு இரங்கி அருளுதல் வேண்டுவது ஒன்று அன்றோ. எ.று.
பெருமைப் பண்புகளை ஆய்ந்து கொண்ட பெரியவர்களைத் “தெரிந்தே பெரியர்” எனச் செப்புகின்றார். “அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்” (குறள்) என்று தெய்வத் திருமறை கூறுவதால், “தெரிந்த பெரியர்க் கருள் புரிதல் சிறப்பென்று உரைத்த தெய்வ மறை” என்று சொல்லுகின்றார். பெரியோர்க் குரிய பெருநெறியை மேற் கொள்ளாது வேறுபட்டவர்களை, “திரிந்த சிறியர்” என்று தெரிவிக்கின்றார். பெரியோர்க்கு அருள் புரிவதினும் குணஞ் செயல்களால் சிறியராயினோர்க்கு அருள் புரிவது எல்லாச் சிறப்புக்களில் தலையாயது என வேதங்கள் உரைப்பது பற்றி, “சிறியர்க் கருள் புரிதல் சிறப்பிற் சிறப்பென்று உரைத்தன” என்று கூறுகின்றார். வேத மொழிகள் அனைத்தும் சான்றோர் தமது சால்பினால் அறிந்து உரைப்பதாதலால் அவர்கள் கூற்றினை மறை மேலேற்றி, “தெய்வமறை உரைத்தன” என இயம்புகின்றார். வேதங்களை முதன் முதலி உரைத்த பெருமானாதல் பற்றி, “புரிந்து மறையைப் புகன்றவனும் நீயே” எனப் புகல்கின்றார். வேதத்தை யுரைத்த முதல்வனாகிய நீ வேத விதிப்படி ஒழுகுதல் வேண்டு மென்பார், “விரிந்த மனத்துச் சிறியேனுக்கு இரங்கி அருளல் வேண்டாவோ” என விளம்புகின்றார்.
இதனால், பண்பு திரிந்த சிறியவனாயினும் எனக்கு அருளுவது வேத நெறிக்கு ஒத்ததே என விளம்பியவாறாம். (6)
|