3597.

     வேண்டார் உளரோ நின்னருளை
          மேலோ ரன்றிக் கீழோரும்
     ஈண்டார் வதற்கு வேண்டினரால்
          இன்று புதிதோ யான்வேண்டல்
     தூண்டா விளக்கே திருப்பொதுவிற்
          சோதி மணியே ஆறொடுமூன்
     றாண்டா வதிலே முன்னென்னை
          ஆண்டாய் கருணை அளித்தருளே.

உரை:

     தூண்டா விளக்காய்த் திகழ்பவனே, தில்லையம்பலத்தில் விளங்குகின்ற பேரொளியை யுடைய மாணிக்க மணியாய் இலங்குபவனே, முன்பு ஒன்பதாம் வயதிலேயே என்னை யாண்டு கொண்ட சிவமே, உனது திருவருளை விரும்பாதவர் யாவருளர்; மேன் மக்களும் கீழ்மக்களுமாகிய யாவரும் கூடி யிருந்து நின் திருவருள் நலத்தை நுகர்தற்கு விரும்புகின்றார்களாதலால், உன் திருவருள் நலத்தை யான் விரும்பிக் கேட்பது புதுமை யன்று; அதனை எனக்கு அளித்து அருள்வாயாக. எ.று.

     பிறரால் தூண்டப் படாது தானே நின்றொளிரும் விளக்கு, “தூண்டா விளக்கு” எனப்படும். தில்லையிலுள்ள பொன்னம்பலத்தைத் “திருப்பொது” என்பு புகழ்கின்றார். சோதி மணி என்பது ஒளி மிக்க மாணிக்க மணி மேல் நின்றது. யாவராலும் விரும்பப்படுவதாகலின், சிவபெருமான் திருவருளை “வேண்டார் உளரோ நின்னருளை” எனவும், அக்கருத்தினை வற்புறுத்துவதற்கு, “மேலார் அன்றிக் கீழோரும் ஈண்டார்வதற்கு வேண்டினரால்” எனவும் உரைக்கின்றார். எக்காலத்தும் எல்லோராலும் வேண்டப்படுவதாகலின் தான் வேண்டுவது புதுமை யன்று என்பாராய், “இன்று புதிதோ யான் வேண்டல்” என எடுத்துரைக்கின்றார். ஆறொடு மூன்றாண்டு ஆவதிலே முன்னென்னை ஆண்டாய் என்பது ஒன்பதாம் வயதிலேயே சிவத்தின் திருவருள் அறிவும் பற்றும் உண்டான செய்தியைக் குறிக்கின்றது. இளமையிலேயே எல்லா நன்மக்களாலும் வேண்டப்படுகின்ற சிவஞான வுணர்வு எய்தப் பெற்றவனாதலின் எனக்கு அருளுவது இன்றியமையாது என்பார், “கருணை அளித்தருளே” என்று கூறுகின்றார்.

     இதனால், இளமையிலே ஆட்கொள்ளப் பட்டமை கூறி அருள் நலம் வேண்டியவாறாம்.

     (7)