3598.

     அருளே வடிவாம் அரசேநீ
          அருளா விடில்இவ் வடியேனுக்
     கிருளே தொலைய அருளளிப்பார்
          எவரே எல்லாம் வல்லோய்நின்
     பொருளேய் வடிவிற் கலைஒன்றே
          புறத்தும் அகத்தும் புணர்ந்தெங்குந்
     தெருளே யுறஎத் தலைவருக்குஞ்
          சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.

உரை:

     எல்லாம் வல்ல பரம்பொருளே, அருளே திருமேனியாக யுடைய அருளரசே, நீ அருள் செய்யாவிடில் அடியவனாகிய எனக்குத் துன்ப விருள் நீங்குமாறு அருள் ஞானவொளி நல்குவார் யாவர், ஒருவருமில்லை யன்றோ; நினது மெய்ம்மை நிறைந்த வடிவின்கண் திகழ்ந்து விளங்கும் ஞானம் ஒன்றே அகத்தும் புறத்தும் கலந்து நிறைந்து எங்கும் தெளிவே பெற எத்தகைய தலைவருக்கும் சிறந்த ஞான வொளியாய்த் திகழ்வதாகும். எ.று.

     சிவனுடைய திருமேனி யருளால் ஆகியதாகலின், “அருளே வடிவாம் அரசே” எனப் புகழ்கின்றார். அருள் ஞானம் எய்தாவிடத்து மலவிருள் நிறைந்து உய்தி பெறாவாறு தடை செய்யுமாதலின், “இவ்வடியேனுக்கு இருளே தொலைய அருளளிப்பார் எவரே” என உரைக்கின்றார். எளியனாகிய எனது மலவிருள் போக்கத் தகுவதன்று என நீ புகலுதற்கும் இடமில்லை என யாப்புறுத்தற்கு “எல்லாம் வல்லோய்” என உரைக்கின்றார். சிவத்தின் திருமேனியில் பிறங்கும் கலைத்திறம் ஒன்றே காண்கின்ற எத்தகைய மேலோர்க்கும் மெய்ம்மை யுணர்வை அளிக்கும் மேன்மை யுடையதாம் என்பாராய், “நின் பொருளேய் வடிவிற் கலை ஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்து எங்கும் தெருளேயுற எத் தலைவருக்கும் சிறந்த அருளாய்த் திகழ்வதுவே” எனத் தெரிவிக்கின்றார். ஈண்டு அருள் என்பது திருவருள் ஞானம் என்பது அறிக.

     இதனால், வேண்டப்படுகின்ற திருவருள் ஞானத்தின் சிறப்புத் தெரிவித்தவாறாம்.

     (8)