3599.

     திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில்
          சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
     புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும்
          புன்மை அறிவால் பொய்உரைத்தே
     இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும்
          என்னே புவிக்கிங் கிசைத்திலைநீ
     அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன
          அமைந்தாய் எல்லாம் அமைத்தாயே.

உரை:

     உலகங்கள் அத்தனையும் படைத்தமைத்தவனே, தில்லையம்பலத்தில் ஒளிர்ந்து எங்கும் நிறைகின்ற சிவ பரம்பொருளே, நின்னுடைய மெய்ம்மைத் தன்மையை நன்கு அறிந்து நின்னைப் புகழ்கின்ற பெருமக்களது குற்றங்களைப் பொறுத்தாளவும், புல்லிய தம்முடைய அறிவால் பொய் பல புகன்று நின்னை யிகழ்ந் தொழுகிய என்னைக் கீழே வீழ்த்தி விடவும் நிலமகட்கு நீ உரைத்தாய் இல்லை; தன்னை ஆழமாகத் தோண்டி வருத்துகின்றவர்களையும் பொறுத்தாள்க எனப் பணித்தமைத்தாய் ஆதலால். எ.று.

     எல்லா வுலகங்களையும் பொருள்களையும் படைத்துத் தத்தமக்குரிய நெறியில் பிறழாது இலங்குமாறு அமைத்தமை புலப்பட, “எல்லாம் அமைத்தாய்” எனப் பரவுகின்றார். நின்னைப் புகழ்ந்தாரைப் பொறுக்கவும் இகழ்ந்தாரைக் கீழே வீழ்த்தவும் நிலமகட்கு ஆணை யிட்டிலை போலும்; இட்டிருப்பாயேல் என்னை நிலமகள் நடமாட விடாது கீழே வீழ்த்திருப்பள் என்பார், “புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும் இகழ்ந்தேன்தனைக் கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கிங்கு இசைத்திலை நீ” என உரைக்கின்றார். சிவத்தின் நலமனைத்தையும் நன்கு அறிந்து புகழ்வார் புகழே பொருள்சேர் புகழாதலின், “நின்னைத் தெரிந்து கொண்டு புகழ்ந்தார்” என்றும், உண்மை யுணராது உரைப்பன புகழாகாமையின் “புன்மை யறிவால் பொய் யுரைத்து” எனப் புகல்கின்றார். புவி - நிலமகள். “அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார் பொறுத்தல்தலை” (குறள்) என்று இப்பாட்டின்கண் நயமுற ஓதப்படுவது காண்க. அகழ்வாரைத் தாங்குக என நிலமகளைப் பணித்த நீ, இகழ்வாரை வீழ்த்துக எனப் பணித்தாய் இல்லை போலும் என்பது கருத்து.

     இதனால் நிலம் தன்னைத் தாங்கி யிருப்பது இகழ்வாரைத் தாங்குதல் ஒழிக வென இறைவன் கட்டளை யிடாமையால் உய்ந்தேன் என முறையிட்டவாறாம்.

     (9)