3600.

     எல்லாம் வகுத்தாய் எனக்கருளில்
          யாரே தடுப்பார் எல்லாஞ்செய்
     வல்லான் வகுத்த வண்ணம்என
          மகிழ்வார் என்கண் மணியேஎன்
     சொல்லா னவையும் அணிந்துகொண்ட
          துரையே சோதித் திருப்பொதுவில்
     நல்லாய் கருணை நடத்தரசே
          தருணம் இதுநீ நயந்தருளே.

உரை:

     எல்லாத் தத்துவ தாத்விகங்களையும் படைத்து முறை செய்துள்ள பெருமானே, என் கண்மணி போன்றவனே, என் சொற்களால் ஆகிய பாட்டுக்கள் அனைத்தையும் ஏற்று கொண்ட தலைவனே, ஞான வொளி திகழும் தில்லையம்பலத்தில் எழுந்தருளும் நல்லவனே, அருட் கூத்தாடும் அரசே, நீ எனக்கு அருள் புரிவாயாயின் உன்னைத் தடுப்பவர் ஒருவருமிலர்; யாவரும் எல்லாம் செய வல்லவனாதலின் அவன் வகுத்தபடி இதுவெனக் கண்டு உவகை மிகுவார்கள்; ஆதலால், இது சமயமாதலின் என்னை விரும்பி அருள் ஞானம் நல்குக. எ.று.

     தத்துவம் முப்பத்தாறும், தாத்விகம் அறுபதும் இறைவன் படைத்து முறை செய்யப்பட்டனவாதலால், “எல்லாம் வகுத்தாய்” என உரைக்கின்றார். கண்ணிற்கு ஒளி நல்கும் மணி போல உயிர்கட்கு உண்மை யுணர்வை அளிப்பதால், “என் கண்மணியே” எனக் கூறுகின்றார். தாம் பாடுகின்ற பாட்டுக்கள் அத்தனையும் இனிய சொற்களால் அமைந்து பொருளால் உயர்ந்து படிப்போருக்கும் பாடுவோருக்கும் கேட்போர்க்கும் இன்பம் செய்வதை யுணர்கின்றாராதலால், “என் சொல்லானவையும் அணிந்து கொண்ட துரையே” என்று சொல்லுகின்றார். பொன் வேய்ந்த திருவம்பலமாதலின் இயற்கை யொளியும், சிவபெருமான் ஞான நடனம் புரியும் இடமாதலின் ஞான வொளியும் கொண்டு திகழ்வது பற்றி, “சோதித் திருப்பொது வில்” என்று கூறுகின்றார். சிவபெருமானது திருக்கூத்து உயிர்கட்கு அருள் புரிவது நோக்கமாக நிகழ்வதாகலின், “கருணை நடத்தரசே” என்று புகழ்கின்றார். தனக்குத் திருவருள் ஞானத்தை அருளாமைக்குக் காரணம் யாதா மென எண்ணுகின்றவர் தடுப்பார் உளரோ என ஐயுற்றுத் தெளிகின்றாராதலின், “எனக்கு அருளில் யாரே தடுப்பார்” எனவும், தடுக்கும் மனமுடையாரும் அருளுகின்ற உன்னை நோக்கி எல்லாம் செய்ய வல்ல இறைவன் செயலாதலின் அதனை யாவரே தடுக்க முடியும் என நினைந்து ஒழுகுவர் என்பார், “எல்லாம் செய் வல்லான் வகுத்த வண்ணம்” என உரைக்கின்றார்.

     இதனால், எல்லாம் செய்வல்லானாகிய நீ அருளிய வழி யாவரும் கண்டு மகிழ்வர் என உரைத்தவாறாம்.

     (10)