3602.

     பார்த்தார் இரங்கச் சிறியேன்நான்
          பாவி மனத்தால் பட்டதுயர்
     தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித்
          தெய்வந் துணைஎன் றிருக்கின்றேன்
     சேர்த்தார் உலகில் இந்நாளில்
          சிறியேன் தனைவெந் துயர்ப்பாவி
     ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ
          கருணைக் கழகிங் கெந்தாயே.

உரை:

     எந்தையே, காண்பவர் மனம் இரங்கத் தக்க நிலையில் சிறுமையுற்று வருந்தும் நான் பாவியாகிய என் மனத்தால் எய்திய துன்பங்களை அந்நாளில் தீர்த்து என்னை ஆதரித்தாய்; அது தொடங்கித் தெய்வ மல்லது வேறு துணை ஒன்றில்லை யென்ற கருத்துடன் இருந்து ஒழிகின்றேன்; நீயும் என்னை இவ்வுலகியல் வாழ்வில் சேர்த்து விட்டாய். இக்காலத்தில் வெவ்விய துயரமாகிய பாவி போந்து என்னைத் தன்பால் ஈர்க்கின்றது. அதனைக் கண்டும் நீ வாழா யிருப்பது நின் திருவருட்கு அழகாகுமா. எ.று.

     பாவி மனம் - பாவத்தைச் செய்விக்கும் மனம். எல்லாச் செய்வினைகட்கும் மனம் காரணமாதலின், “பாவி மனம்” எனக் குறிக்கின்றார். மனம் தெளிவிழந்து துயர்க்காளாகிய போது தெய்வத் திருவருள் ஞானம் எய்தித் தெளிவு நல்கினமை பற்றி, “மனத்தால் பட்ட துயர் தீர்த்தாய் அந்நாள் அது தொடங்கித் தெய்வம் துணை என்றிருக்கின்றேன்” என்று கூறுகின்றார். தெய்வமே துணை என்ற கருத்து உள்ளத்தில் நிலைபெற்ற போதும் உலகியலில் கலந்து வாழ வேண்டி யிருத்தலின், “சேர்த்தாய் உலகில்” என வுரைக்கின்றார். சேர்த்தார் உலகில் என்பது பாடமாயின் உலகவர் என்னை இவ்வுலக வாழ்வில் சேர்த் தொழிந்தனர் என்று பொருள் கொள்க. அறிவாலும் துன்பத்தாலும் சிறுமை யுற்றுக் கிடக்கின்றேன் என்ற கருத்தை வற்புறுத்துதற்கு மறுவலும் தம்மைச் சிறியேன் எனத் தெரிவிக்கின்றார். உலகியலிலும் தாம் மிக்க பெருந் துயர் கண்டு வருந்துவது தோன்ற, “வெந்துயர்ப் பாவி ஈர்த்தால்” என விளம்புகின்றார். இவ்வாறு துயர்க் கடலில் வீழ்ந்து வருந்தும் என்னை அது நீங்கியுய்தற்கு அருளாது நீ வாழா இருப்பது முறையன்று எனத் தெரிவிப்பாராய், “அது கண்டிருப்பதுவோ கருணைக்கு அழகு இங்கு” என்று கூறுகின்றார்.

     இதனால், துயர் நீக்கி ஆண்டருளுதல் வேண்டுமாறு முறையிட்டவாறாம்.

     (12)