3603. தாயே எனைத்தான் தந்தவனே
தலைவா ஞான சபாபதியே
பேயேன் செய்த பெருங்குற்றம்
பொறுத்தாட் கொண்ட பெரியோனே
நீயே இந்நாள் முகமறியார்
நிலையில் இருந்தால் நீடுலகில்
நாயே அனையேன் எவர்துணைஎன்
றெங்கே புகுவேன் நவிலாயே.
உரை: தாயாய் என்னை யுலகில் பிறப்பித்தவனே, உலகுயிர்கட்குத் தலைவனே, ஞான சபைக்கு முதல்வனே, பேய்த் தன்மையை யுடைய நான் செய்த பெரிய குற்றங்களைப் பொறுத்து ஆண்டு கொண்ட பெருமையை யுடையவனே, இந்நாளில் முகமறியாதவருடைய புறக்கணிப்பு நிலையில் நீ இருப்பாயானால், நீண்ட இவ்வுலகில் நாய் போன்ற யான் யாரைத் துணை கொண்டு எங்கே போவேன் கூறுக. எ.று.
“தாயாகிய உலகங்களை நிலைபேறு செய்தலைவன்” (முல்லைவாயில்) என ஞானசம்பந்தர் முதலியோர் ஓதுவதால், “தாயே எனைத்தான் தந்தவனே” என்றும், உலகுயிர்கள் அனைத்திற்கும் தலைவனாதல் தோன்றத் “தலைவா” என்றும் சாற்றுகின்றார். தில்லையிலுள்ள ஞான சபைக்குத் தலைவனாகவும் முதல்வனாகவும் திகழ்ந்து ஞானத் திருக்கூத்தை நடத்துவதால் ‘ஞான சபாபதியே’ என நவில்கின்றார். பெரிய குற்றங்கள் பல செய்கின்றமை புலப்ப, “பேயேன் செய்த பெருங் குற்றம்” என்றும், அக் குற்றங்களால் மயக்க வாதனையுற்று வருந்தாவாறு நல்லுணர்வும் சிவநேயமும் உள்ளத்தில் நிலவுதல் பற்றி, “குற்றம் பொறுத்தாட்கொண்ட பெரியோனே” என்றும் பேசுகின்றார். சிறியோர் தம் சிறுமையால் செய்த பிழைகளைப் பெரியோர் தமது பெருமையால் பொறுத்து ஆட்கொள்ளுதல் இயல்பாதல் பற்றி, “ஆட்கொண்ட பெரியோனே” என வுரைக்கின்றார். முகமறியார் - முன்னற் கண்டறியாதார். முன்பு அறியாதவரைக் காணின் பராமுகமாய் இருத்தல் உலகியல்பாதலின், “முகமறியார் நிலையில் நீ இருந்தால்” என்று கூறுகின்றார். கீழ்மைப் பண்புடைமை பற்றித் தம்மை, “நாயே யனையேன்” என வடலூர் வள்ளல் குறிக்கின்றார். எல்லாம் வல்லவனும் எல்லார்க்கும் தலைவனுமாகிய சிவ பரம்பொருள் அல்லது துணையாவாரும் புகலிடமாவாரும் பிறர் யாருமின்மையின், “எவர் துணை என்று எங்கே புகுவேன்” என முறையிடுகின்றார்.
இதனால், சிவ பரம்பொருளை யல்லது தமக்குத் துணையும் புகலும் இல்லையென முறையிட்டவாறாம். (13)
|