3604. ஆயேன் வேதா கமங்களைநன்
கறியேன் சிறியேன் அவலமிகும்
பேயேன் எனினும் வலிந்தென்னைப்
பெற்ற கருணைப் பெருமானே
நீயே அருள நினைத்தாயேல்
எல்லா நலமும் நிரம்புவன்நான்
காயே எனினும் கனிஆகும்
அன்றே நினது கருணைக்கே.
உரை: அவலமுற்று வருந்தும் பேய் போன்றவன் எனினும் என்னை வலிந்து ஆட்கொண்ட கருணையுருவாகிய பெருமானே, வேதங்கள் ஆகமங்களாகிய ஞான நூல்களை ஆராயாதவன்; மற்றவற்றையும் முற்ற அறியாத சிறுமையுடையவன்; நீயே மனமுவந்து அருள் புரிய நினைப்பாயாயின் எல்லா நலங்களும் நிறைந்து இனிது வாழ்வேன்; நினது திருவருளுக்கு இலக்காகுவது பக்குவம் உள்ள காயாயினும் நல்ல கனியாகுமன்றோ. எ.று.
துன்ப மிக்க விடத்து அறிவு கலங்கி மனம் தெளிவின்றிப் பேய் போல் அலைவித்தலின் தம்மை, “அவல மிகும் பேயேன்” என உரைக்கின்றார். வேதமும் ஆகமங்களும் சமய மெய்ஞ்ஞான நூல்களாதலால் அவற்றை முதற்கண் எடுத்து, “வேதாகமங்களை ஆயேன்” என உரைக்கின்றார். பிற நூல்களையும் நான் கடைபோகக் கற்றதில்லை என்பாராய், “நன்கறியேன்” என்றும், அறியாமையால் சிறுமை யுற்றவன் என்றற்கு, “சிறியேன்” என்றும் எடுத்துரைக்கின்றார். பேய் போல அவலித்தலைந்தேனாயினும் என்னை உன்னையே நினைந்தொழுகுமாறு ஆட்கொண்டருளி அதற்கேது உனது திருவருள் என்பாராய், “வலிந்து என்னைப் பெற்ற கருணைப் பெருமானே” என்று கூறுகின்றார். திருவருளால் வரும் பயன் கூறுவார், “நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன் நான்” என்றும், திருவருள் ஞானம் பெறுவதற்குரிய பக்குவம் இல்லாதவனாயினும் திருவருள் எய்திய வழி நிறைந் பக்குவி ஆவேன் என வற்புறுத்தற்கு, “காயே எனினும் கனியாகும் அன்றே நினது கருணைக்கே” எனக் கட்டுரைக்கின்றார்.
இதனால், திருவருள் ஞானப் பேற்றுக்குப் பக்குவா பக்குவம் வேண்டாமை தெரிவித்தவாறாம். (14)
|