3605. கருணா நிதியே என்இரண்டு
கண்ணே கண்ணிற் கலந்தொளிரும்
தெருணா டொளியே வெளியேமெய்ச்
சிவமே சித்த சிகாமணியே
இருணா டுலகில் அறிவின்றி
இருக்கத் தரியேன் இதுதருணம்
தருணா அடியேற் கருட்சோதி
தருவாய் என்முன் வருவாயே.
உரை: தருணத்தில் வந்து பயன் தரும் பரமசிவனே, அருட் செல்வனே, என்னுடைய இரண்டு கண் போன்றவனே, என் இரு கண்களிலும் கலந்து தெளிவு நல்கும் பரவொளியே, ஞான வொளியாக விளங்குபவனே, மெய்ப்பொருளாகிய சிவமே, என் சித்தத்தில் திகழும் முடிமணியே, இருள் நிறைந்த யுலகில் திருவருள் அறிவின்றி யிருக்க வல்லேனல்லேனாதலால் அடியவனாகிய எனக்கு உனது திருவருள் விளக்கத்தைத் தருதற்கு என் முன் வந்தருள்க. எ.று.
கருணாநிதி - கருணையாகிய செல்வம். உடல் உறுப்புக்களில் தலைமை சான்றவையாதலின் அவற்றை உவமம் செய்து, “என் இரண்டு கண்ணே” என்று கூறுகின்றார். கண்ணின் ஒளியிற் கலந்து காணப்படும் பொருள்களைத் தெளிய உணர்தற்கு உதவும் ஞான வொளியாய் விளங்குதலின், “கண்ணிற் கலந்து ஒளிரும் தெருள் நாடும் ஒளியே” எனப் புகல்கின்றார். தத்துவ தாத்துவிகங்கட்கு முதலாகும் மாயைக்கு அதீத நிலையாகிய ஞான வெளியாய் அதன்கண் விளக்கமுறுவது பற்றிச் சிவ பரம்பொருளை “வெளியே” என விளம்புகின்றார். மெய்யுணர்ந்தோரால்தமது நுண்ணுணர்வால் மெய்ப்பொருளால் உணரப்படுவது பற்றிச் சிவபெருமானை, “மெய்ச் சிவமே” எனப் போற்றுகின்றார். சித்தமாகிய அந்தக் கரணத்தின் உச்சியில் மாணிக்க மணியின் ஒளி கொண்டு ஆன்ம ஞானம் காண நிற்றலால் சிவனை, “சித்த சிகாமணியே” எனச் செப்புகின்றார். அறியாமை மிக்கிருத்தல் பற்றி உலகியலை “இருள் நாடு உலகு” என இயம்புகின்றார். இருள் நிறைந்த உலகில் அறிவொளி யின்றி இருத்தல் துன்பத்திற்கு ஏதுவாதலின், “இருள் நாடுலகில் அறிவின்றி இருக்கத் தரியேன்” என இசைக்கின்றார். இப்பொழுது நினது அருள் ஞானவொளி பெற்று உனது உண்மையுணர்ந்து உன்னி உறைகின்றேனாதலால் இத்தருணத்தில் உனது திருவருள் ஞான ஒளியைத் தந்தருள்க என்று வேண்டுவாராய், “இது தருணம் அடியேற்கு அருட் சோதி தருவாய் என் முன் வருவாய்” என்று முறையிடுகின்றார்.
இதனால், திருவருள் ஞான வொளி நல்குதல் வேண்டும் என விண்ணப்பித்தவாறாம். (15)
|