3606. வருவாய் என்கண் மணிநீஎன்
மனத்திற் குறித்த வண்ணமெலாம்
தருவாய் தருணம் இதுவேமெய்த்
தலைவா ஞான சபாபதியே
உருவாய் சிறிது தாழ்க்கில்உயிர்
ஒருவும் உரைத்தேன் என்னுடைவாய்
இருவாய் அலநின் திருவடிப்பாட்
டிசைக்கும் ஒருவாய் இசைத்தேனே.
உரை: நிலைபெற்ற தலைவனே, ஞான சபைக்கு முதல்வனே, ஒப்பற்றவனே, என் கண்ணின் மணி போன்ற நீ என் முன் போந்தருளி என் மனத்தின்கண் எண்ணியவற்றையெல்லாம் எண்ணியவாறு அருளுக; நீ அருளுதற்கு இதுவே தக்க பருவமாகும்; சிறிது காலதாமதம் செய்வாயாயின் என்னுயிர் என் உடலினின்றும் நீங்கிவிடும் என்று மெய்ம்மையாக உரைக்கின்றேன்; எனக்கு வாய் இரண்டல்ல, நின் திருவடி பொருளாகப் பாட்டமைத்துப் பாடும் ஒரே வாயாகும்; சொல்லி விட்டேன். எ.று.
உலகுயிர்கட்கு, பண்டும் இன்றும் என்றும் உள்ள பரமதலைவன் என்றற்கு, “மெய்த் தலைவா” என உரைக்கின்றார். ஒருவன் - ஒப்பற்றவன். ஆர்வமிகுதி புலப்பட, “என் கண்மணி நீ” என உரைக்கின்றார். உயிர்பிரியும் நேரம் இது வென வரையறுத்து உரைக்க மாட்டாமை பற்றி, “சிறிது தாழ்க்கில் உயிர் ஒருவும்” என உரைக்கின்றார். ஒருவுதல் - நீங்குதல். ஆதலால் என் கண்மணி போன்ற நீ என் முன் போந்தருளி நான் எண்ணிய எண்ணமெல்லாம் எண்ணியவாறு கைகூடும் திருவருளை நல்கியருளுக வென வேண்டுவாராய், “வருவாய்” என் கண்மணி நீ என் மனத்திற்கு குறித்த வண்ணமெல்லாம் தருவாய்” என்றும், தருவதைக் காலமறிந்து நல்குதல் சாலச் சிறந்தது என்றற்கு, “தருணம் இதுவே” என்றும் சாற்றுகின்றார். தமது சொல்லின் உறுதியை வற்புறுத்தற்கு “என்னுடைய வாய் இருவாய் அல நின் திருவடிப் பாட்டிசைக்கும் ஒரு வாய் இசைத்தேனே” என்று ஓதுகின்றார். ஒரு வாய் - சொல்லால் ஒரு தன்மைத்தான வாய் என்பது பொருள்.
இதனால், உயிரது நிலையாமை கருதி எனக்கு வேண்டுவன உதவியருள்க என வேண்டியவாறாம். (16)
|