3607. தேனே திருச்சிற் றம்பலத்தில்
தெள்ளார் அமுதே சிவஞான
வானே ஞான சித்தசிகா
மணியே என்கண் மணியேஎன்
ஊனே புகுந்தென் உளங்கலந்த
உடையாய் அடியேன் உவந்திடநீ
தானே மகிழ்ந்து தந்தாய்இத்
தருணம் கைம்மா றறியேனே.
உரை: தேன் போல் இனிப்பவனே, தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற தெளிந்த அமுதாகியவனே, சிவம் நிலவும் ஞானாகாசமே, ஞானிகளின் சித்தத்தில் விளங்குகின்ற சிகாமணியே, என் கண்ணின் மணி போல்பவனே, என் உடலுக்குள் புகுந்து உள்ளத்தில் கலந்து தனக்கு உடைமையாகக் கொண்டவனே, அடிமையாகிய யான் மனம் மகிழுமாறு நீயே வந்து உவகையுடன் உன் திருவருள் ஞானத்தை இப்பொழுதே தந்தருள்க; இதற்கு யான் யாது கைம்மாறு செய்வேன்; ஒன்றும் அறிகிலேன். எ.று.
சிவ பரம்பொருளைச் சிந்திப்பார் சிந்தைக்கண் தேனூறி இனித்தலால், “தேனே” என்றும், “திருச்சிற்றம்பலத்தில் தெள்ளார் அமுதே” என்றும் சிறப்பிக்கின்றார். சிதாகாசம் எனப்படும் பெருவழியாய் அதற்கு உரியவனாய் விளங்குதல் பற்றிச் சிவபெருமானை, “சிவஞான வானே” எனப் பரவுகின்றார். சிவஞானிகளின் சித்தமாகிய ஞானத்தின்கண் முடிமணியாய்க் காட்சி தருதலால், “ஞான சித்த சிகாமணியே” என நவில்கின்றார். பசு கரணங்களாகிய உடம்பையும் உள்ளத்தையும் தனது திருவருள் சிவ கரணங்களாக்கிக் கொண்டமை புலப்பட, “என் ஊனே புகுந்து என்னுளம் கலந்த உடையாய்” என உவந்துரைக்கின்றார். தெளிவும் மகிழ்ச்சியும் உண்டாகுமாறு திருவருள் ஞானம் கைவரப் பெற்றமை உள்ளத்தால் உணர்ந்துரைத்தலின், “நீ தானே மகிழ்ந்து தந்தாய் இத்தருணம் கைம்மாறு அறியேனே” என்று கூறுகின்றார். திருவருட்கு ஒப்பதும் மிக்கதும் வேறில்லாமையால் “கைம்மாறு அறியேன்” என்று கூறுகின்றார்.
இதனால், திருவருளினின்றும் கைவரப் பெற்றமைக்குக் கைம்மாறில்லை யெனத் தெரிவித்தவாறாம். (17)
|