3608. அறியேன் சிறியேன் செய்தபிழை
அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக்
குறியே குணமே பெறென்னைக்
குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க
நெறியே விளங்க எனைக்கலந்து
நிறைந்தாய் நின்னை ஒருகணமும்
பிறியேன் பிறியேன் இறவாமை
பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே.
உரை: அருளொளி திகழும் பரம்பொருளே, நல்ஞானம் பெற என்னைக் குறிக்கொண்டு உனது திருவருளை வழங்கினாய்; மெய்ம்மை நெறியாகிய சன்மார்க்கத்தில் நின்று யான் விளங்க என்னுட் கலந்து நிறைந்து விளங்குகின்றாய்; அறியாமையால் சிறியவனாகிய யான் செய்த குற்றங்கள் அத்தனையும் பொறுத்துக் கொண்டாயாதலால் இனி ஒருகண நேரமும் பிரிய மாட்டேன்; இறவா நிலையும் பெரிய ஞான இன்பமும் எய்தி விட்டேன். எ.று.
இறைவனது ஞான வொளி அருட்சோதி எனப்படுதலின், அதனையே அவன் திருவுருவாக்கி, “அருட் சோதிக் குறியே” என்று உரைக்கின்றார். குணம் என்றது ஈண்டுச் சிவஞான நலம். திருவருள் ஞானம் கைவரப் பெற்றமை இனிது விளங்க, “என்னைக் குறிக் கொண்டளித்தாய்” என்று கூறுகின்றார். சிவஞானத் திருநெறிச் சன்மார்க்கம் எனச் சான்றோரால் சிறப்பித்து உரைக்கப்படுவது பற்றியும், அந்நெறிக்கண் கருவி கரணங்கள் அத்தனையும் சிவ கரணமாய்த் திகழ்வது உணர்ந்தும், “சன்மார்க்க நெறியே விளங்க எனைக் கலந்து நிறைந்தாய்” எனச் சாற்றுகின்றார். சிவபோகத்தை நுகரத் தலைப்பட்டமை தோன்ற, “நின்னை ஒருகணமும் பிறியேன் பிறியேன்” என்றும், சிவபோகம், இறத்தலும் பிறத்தலும் தவிர்த்த தன்மையை நல்குதலால், “இறவாமை பெற்றேன்” என்றும், “உற்றேன் பெருஞ்சுகம்” என்றும் உரைக்கின்றார். சிவஞானத்தால் சிவபோகம் நுகரத் தலைப்பட்ட நம்பியாரூரரும், “பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்” என உரைப்பது காண்க.
இதனால், சிவஞான போகம் தலைப்பட்டமை தெரிவித்தவாறாம். (18)
|