3609. சுகமே நிரம்பப் பெருங்கருணைத்
தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி
அகமே விளங்கத் திருஅருளார்
அமுதம் அளித்தே அணைத்தருளி
முகமே மலர்த்திச் சித்திநிலை
முழுதும் கொடுத்து மூவாமல்
சகமேல் இருக்கப் புரிந்தாயே
தாயே என்னைத் தந்தாயே.
உரை: எனக்குத் தாயும் தந்தையுமாகிய பெருமானே, ஞான சுகமே, என்னுள் நிறையுமாறு பெருங் கருணையாகிய தொட்டிலில் என்னைக் கிடத்தி எனது மனம் விளக்க முறுமாறு திருவருள் ஞானமாகிய அமுதம் தந்து என்னைத் தழுவி எனது முகம் மலரச் செய்து சித்தி நிலை முழுதும் கொடுத்து யான் மூத்து விளியாமல் நிலைமையில் இருக்குமாறு அருள் புரிந்தாய். எ.று.
நிலவுலகில் அறியாமை முதலியவற்றால் துன்பமின்றி இனிது இருக்குமாறு தனது திருவருளில் உறையப் பண்ணினமை புலப்பட, “சுகமே நிரம்பப் பெருங்கருணைத் தொட்டி லிடத்தே எனை அமர்த்தி” என உரைக்கின்றார். திருவருள் உணர்வால் தமது மனத்தின்கண் அருள் விளக்கம் உண்டாகச் செய்தமை தோன்ற, “அகமே விளங்கத் திருவருளால் அமுதம் அளித்து அணைத்தருளி” என்று கூறுகின்றார். துன்பத்தால் தோற்றம் சுருங்குவதின்றிச் சிவஞானச் சித்தி நிலை முழுதும் தமக்கு எய்தினமை புலப்படுத்தற்கு, “சித்தி நிலை முழுதும் கொடுத்து” என்றும், அதனால் தாழ் எய்திய ஆன்ம லாபம் இது வென்பார், “மூவாமல் சகமேல் இருக்கப் புரிந்தாய்” என்றும் உரைத்தருளுகின்றார்.
இதனால், தான் பெற்ற திருவருள் ஞானப் பயனை விளக்கியவாறாம். (19)
|