3610.

     தந்தாய் இன்றும் தருகின்றாய்
          தருவாய் மேலுந் தனித்தலைமை
     எந்தாய் நினது பெருங்கருணை
          என்என் றுரைப்பேன் இவ்வுலகில்
     சிந்தா குலந்தீர்த் தருள்எனநான்
          சிறிதே கூவு முன்என்பால்
     வந்தாய் கலந்து மகிழ்கின்றாய்
          எனது பொழுது வான்பொழுதே.

உரை:

     ஒப்பற்ற தலைமையை யுடைய என் தந்தையே, நினது திருவருளை முன்னும் தந்தாய்; இப்பொழுதும் தருகின்றாய்; இனிமேலும் தர விருக்கின்றாய்; உன்னுடைய மிக்க பெருங் கருணையை என்னென்று சொல்வேன்; இவ்வுலகியலில் எனக்கு உண்டாகும் மனவேதனையைத் தீர்த்தருள் என நான் சிறிது கூறுதற்கு முன்பே என்னிடம் வந்து கலந்து இன்புறுகின்றாய்; இது எனக்கு ஒரு நல்ல காலமாகும். எ.று.

     உன் திருவருளை எனக்கு எப்போதும் தந்த வண்ணம் இருக்கின்றாய் என்பாராய், “தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய்” என வுரைக்கின்றார். சிவனோ டொக்கும் தலைமைத் தேவர் வேறின்மையின், “தனித் தலைமை எந்தாய்” என இயம்புகின்றார். வேண்டுவோர் சிறிது கூறி வேண்டுதற்கு முன்பே எல்லாம் அறிந்து உதவி யருளும் பெருமான் என்பது இனிது புலப்பட, “நான் சிறிதே கூவுமுன் என்பால் வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே” என்று கூறுகின்றார்.

     இதனால், திருவருள் நலப் பேறு எய்தினமைக்குச் சிவ பரம் பொருளை வியந்து பாராட்டியவாறாம்.

     (20)