18. அபயம் இடுதல்
அஃதாவது, பயமின்மை அருளுக என இறைவன்பால் முறையிடுதல்.
இதன்கண், வடலூர் வள்ளல் இறைவனை நோக்கி “இனி நீ வருவாய் அலையேல் உயிர் வாழ்கலன் நான்” என்றும், தமக்குச் செய்வகை ஒன்றினை “இங்கு இது வென்று” இறைவன் அருள வேண்டும் என்றும், கொலைதீர் நெறிக் குருவாகிய இறைவன் “கொடு வெம்புலையும்
கொலையும் விடுமாறு அருள்” செயல் வேண்டும் என்றும், தம் 'உடலோடு உறுமா பொருள் ஆவியும்' இறைவ னுடையனவே யன்றித் தம் முடையன அல்ல என்றும், 'பற்றம் பலமே அலதோர் நெறியும்' தாம் அறியார் என்றும் பிறவும் கூறுகின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3611. உருவாய் அருவாய் ஒளிவாய் வெளியாய்
உலவா ஒருபேர் அருளார் அமுதம்
தருவாய் இதுவே தருணம் தருணம்
தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்
மதிசேர் முடிஎம் பதியே அடியேன்
குருவாய் முனமே மனமே இடமாக்
குடிகொண் டவனே அபயம் அபயம்.
உரை: பிறைத் திங்களை முடிமேல் அணிந்துள்ள எங்கள் தலைவனே, அடியேனுக்கு ஞான குருவாய் முன்பே என் மனத்தை யிடமாகக் கொண்டு உள்ளவனே; உருவாகவும், அருவாகவும், ஒளியாகவும், வெளியாகவும், என்றும் கெடாத ஒப்பற்ற உனது அருள் நிறைந்த ஞான வமுதத்தை எனக்குத் தந்தருள்க; அதற்கு இதுவே சமயம்; தாமதிப்பாயின் நான் சிறிதும் பொறேன் இப்பொழுதே வருவாயாக; வாராது என்னை அலைக்க வேண்டா; நான் உயிர் வாழும் திறம் இல்லாதவனாவேன்; நீயே எனக்கு அபயம் தருதல் வேண்டும். எ.று.
உருவும், அருவும், ஒளியும், வெளியுமாய் விளங்குபவனாதலால் சிவனை, “உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்” என உரைக்கின்றார். என்றும் உள்ள பரம்பொருளாதலின் அவனது திருவருள் ஞானமாகிய அமுதத்தை “உலவா ஒருபேர் அருளார் அமுதம்” என்று சிறப்பிக்கின்றார். ஞானப் பேற்றுக்கு உரிய பக்குவம் எய்தினமை புலப்பட, “தருவாய் இதுவே தருணம் தருணம்” என்றும் கூறுகின்றார். தருணம் தவறுமானால் தனக்கு எய்தும் துன்பம் பெரி தென்றற்கு, “தரியேன் சிறிதும் தரியேன்” என்றும், இப்பொழுதே வந்து தந்தருள்க என்பாராய், “இனி நீ வருவாய்” என்றும் இயம்புகின்றார். வாராமை மனத்தைத் துயர் மிக்கு வருத்துதல் தோன்ற, “அலையேல் உயிர் வாழ்கலன் நான்” என்று மொழிகின்றார். பிறைத் திங்களை முடியிற் சூடிய பெருமான் ஆதல் பற்றி, “மதிசேர் முடி எம் பதியே” என்றும், உயிர்க்குயிராய் நின்று அவ்வப் போது மெய்யுணர்வு நல்கும் சிறப்புச் செயலை யுடையனாதல் பற்றி, “அடியேன் குருவாய் முனமே மனமே இடமாக்குடி கொண்டவனே” என்றும் கூறுகின்றார். அபயம், அச்சமின்றி யிருத்தற்கு அவரே புகலிடமாதலால், “அபயம் அபயம்” என அடுக்குகின்றார். அபயம் - பயமில்லாத புகலிடம்.
இதனால், தமக்குப் புகலிடமாதல் வேண்டுமென சிவன்பால் முறையிட்டவாறாம். (1)
|