3612. என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங்
கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்
மன்னே அயனும் திருமா லவனும்
மதித்தற் கரிய பெரிய பொருளே
அன்னே அப்பா ஐயா அரசே
அன்பே அறிவே அமுதே அழியாப்
பொன்னே மணியே பொருளே அருளே
பொதுவாழ் புனிதா அபயம் அபயம்.
உரை: மன்னவனே, பிரமனும் திருமாலும் நினைத்தற் கரிதாகிய பெரிய பரம்பொருளே! அம்மையே, அப்பனே, ஐயனே, அரசனே, என் அன்பே, என் அறிவே, எனக்கு அமுதாகுபவனே, அழியாத பொன்னே, மணியே, வேண்டும் பொருளே, திருவருளே, தில்லையம்பலத்தில் வாழ்கின்ற தூயவனே, எனக்கு அபயம் அருள்க; யான் யாது செய்வேன்; ஒன்றாகிய செயல்வகை இதுவேயென வரையறுத்து உரைத்து அருள்வாயாக; அதற்கு இதுவே தருணம். எ.று.
நாம் செய்யும் வினை வகைகட்கு உரிய பயனை அவை ஒழியாது நுகர்வித்தல் பற்றி, “மன்னே” என்றும், பிரமனும் திருமாலும் பாச பசு ஞானங்களையுடையவராதலின், அவர்களால் அறிய முடியாத பரமாகிய பிரமப் பொருளாய்ப் பிறங்குதலின், “அயனும் திருமாலவனும் மதித்தற்கரிய பெரிய பொருளே” என வுரைக்கின்றார். உயிர்கட்கு அம்மை அப்பனாயும், தலைவனாயும், அரசனாகவும் முறைமையுற்று அருளுதலால், “அன்னே அப்பா ஐயா அரசே” எனவும், அன்பும் அறிவுமாய் இன்பம் அருளுதலின், “அன்பே அறிவே அமுதே” எனவும் மொழிகின்றார். உலகியல் பொன்னும் மணியும் பொருளும் நிலையின்றிக் கெடுவது போலாது என்றும் நிலைத்த பொருளாய் இன்பவாழ்வு நல்குதல் தோன்ற, “அழியாப் பொன்னே மணியே பொருளே” எனப் புகழ்கின்றார். கூத்தப் பெருமானது திருவுருவம் அருள் உருவமாதலின், “அருளே பொதுவாழ் புனிதா” எனப் போற்றுகின்றார். மல விருளால் மலைப்புண்டிருத்தல் பற்றி விளங்கிய அறிவுடையவ வல்லேன் என்பாராய், “என்னே செய்வேன்” என்றும், செய்யத் தக்கது இதுவென ஒரு நெறியினை எனக்குரைத்து அருளுக என வேண்டலுற்று, “செய்வகை ஒன்றிங்கு இதுவென்று அருள்வாய்” என்றும் பராவுகின்றார்.
இதனால், செய்வகை ஒன்றை அருளுமாறு விண்ணப்பித்தவாறாம். (2)
|