3614.

     மருளும் துயரும் தவிரும் படிஎன்
          மனமன் றிடைநீ வருவாய் அபயம்
     இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
          சி்னன்என் றிகழேல் அபயம் அபயம்
     வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
          விடுமா றருள்வாய் அபயம் அபயம்
     அருளும் பொருளும் தெருளும் தருவாய்
          அபயம் அபயம் அபயம் அபயம்.

உரை:

     அருளுணர்வும் பொருளும் ஞானத் தெளிவும் தருபவனாதலால் பெருமானே, என் மனத்தில் உண்டாகும் மருட்கையையும் துயரத்தையும் நீங்குமாறு நீ என் மனமாகிய சபையின்கண் எழுந்தருளுவாயாக; அறியாமையும் பிறப்பும் எய்துவித்தற்குரிய வஞ்சகம் நிறைந்த நெஞ்சினையுடையவன் என்று என்னை இகழ வேண்டா; வெருட்சியும் கொடிய வெவ்விய புலையுணர்வும் கொலைச் செயலும் என்னை விட்டகலுமாறு அருள்வாயாக; இவை என்னைப் பற்றாது ஒழிவதற்கு நீயே எனக்குப் புகலிடம் எ.று.

     மருள் - பொருளல்லவற்றைப் பொருளாக உணரச் செய்வது. “பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும் மருள்” (குறள்) எனச் சான்றோர் உரைப்பது காண்க. துயரம் அறிவைத் திருத்தித் தவறாயவற்றைச் செய்தற்கு இடமளிப்பதாகலின், மருளும் துயரமுமாகிய இரண்டும் நீங்குதல் வேண்டி, என் மனத்தின்கண் எழுந்தருளும்படி வேண்டுகின்றாராதலின், “மருளும் துயரும் தவிரும்படி என் மனமன்றிடை நீ வருவாய்” என விண்ணப்பிக்கின்றார். வஞ்ச நினைவுகள் நெஞ்சின்கண் நின்ற வழி அறியாமையும் பிறவி வகைகளும் எய்தும் என்பது பற்றி, “இருளும் பவமும் பெறுவஞ்சக நெஞ்சினன் என்று இகழேல்” என வேண்டுகின்றார். வெருட்சி மருளுதலுமாம். புலால் உணவு கொடுமை யுடையதாய் வெவ்விய நினைவுகளைத் தூண்டுவதாதலின் அதனைக் “கொடு வெம்புலை” எனவும், அது காரணமாகக் கொலைத் தொழில் செய்யப்படுதலின், “கொலையும் விடுமாறு அருள்வாய்” என மொழிகின்றார். உயிர்கட்கு அருள் செய்யும் பண்பும் வாழ்விக்கும் பொருள் வகைகளும், தெளிந்த ஞானமும் சிவன் அருளால் எய்துவனவாதலால், “அருளும் பொருளும் தெருளும் தருவாய்” என விண்ணப்பிக்கின்றார்.

     இதனால், பிறவிக்கு ஏதுவாகிய குணம் செயல்கள் தமக்கு உண்டாகாவாறு அருள்க என வேண்டியவாறாம்.

     (4)