3615.

     இனிஓர் இறையும் தரியேன் அபயம்
          இதுநின் அருளே அறியும் அபயம்
     கனியேன் எனநீ நினையேல் அபயம்
          கனியே கருணைக் கடலே அபயம்
     தனியேன் துணைவே றறியேன் அபயம்
          தகுமோ தகுமோ தலைவா அபயம்
     துனியே அறவந் தருள்வாய் அபயம்
          சுகநா டகனே அபயம் அபயம்.

உரை:

     சிவமாகிய கனியே, கருணையால் கடல் போன்றவனே, அந்தமில்லாத இன்ப நாட்டையுடையவனே, உலகில் துன்பங்களை இனி ஒரு சிறிதும் பொறுக்க மாட்டேன்; எனது மாட்டாமையை உன்னுடைய திருவருள் நன்கு அறியும்; மனம் கனியாதவன் என நீ நினைத்தலை ஒழிக; தனியனாகிய எனக்குத் துணையாவார் இவ்வுலகில் வேறு ஒருவரையும் அறியேன்; நான் துன்புறுகக் காண்பது தலைவனாகிய உனக்குத் தகுமா; இதனால் எனக்கு உள்ளத்தில் வெறுப்புண்டாகாவாறு அருள் செய்வாயாக எ.று.

     கடலலை போல் உலகியல் துன்பங்கள் தொடர்ந்து தாக்குதலைத் தாங்க மாட்டாமை புலப்படுப்பாராய் வடலூர் வள்ளல், “இனி ஓர் இறையும் தரியேன் அபயம்” எனவும், இது இறைவன் திருவருள் அறிய நிகழ்வது என்றற்கு, “இது நின் அருளே அறியும் அபயம்” எனவும் கூறுகின்றார். மெய்யன்புக்கு மெல்லியனாய்க் கனிந்துருகும் நெஞ்சமுடையேனல்லேன் என எனை நீ நினைத்தல் கூடாது என முறையிடுவார், “கனியேன் என நீ நினையேல் அபயம்” என உரைக்கின்றார். கருணை நிறைந்து மேனி சிவந்து தோன்றும் நலம் பற்றிச் சிவனை, “கனியே கருணைக் கடலே அபயம்” எனக் கூறுகின்றார். உலகியல் தொடர்பும், நான் எனது என்னும் உணர்வும் உடைமை பற்றித் தம்மை, “தனியேன்” எனச் சாற்றுகின்றார். சிவத்தின் திருவருள் துணையின்றித் தனித்து வாழ்தல் ஆன்மாகட்கு இயலாமையின், “துணை வேறறியேன்” என்று சொல்லுகின்றார். தன்னையின்றி வாழ்தல் இல்லாத ஆன்மா வருந்துவது காண்டல் ஆன்ம நாயகனாகிய உனக்குப் பொருந்தாது என்பார், “தகுமோ தகுமோ தலைவா அபயம்” என உரைக்கின்றார். துன்பங்களின் தாக்குதலால் மக்கள் உள்ளம் துனியுற்றுக் குற்றப்படுவது இயல்பாதலால், அது தமக்கு உண்டாகலாகாது என்பாராய், “துணியேயுற வந்து அருள்வாய் அபயம்” என்று சொல்லுகின்றார். இன்பவுலகத்து இறைவனாதல் பற்றி, “சுக நாடகனே அபயம் அபயம்” எனப் போற்றுகின்றார்.

     இதனால், துன்பத் தொடர்பு அறாமையின் உள்ளத்தில் துனிதோன்றிக் குற்றப்படுத்தல் ஆகா தென அபயம் புகுகின்றவாறாம்.

     (5)