3617. மலவா தனைதீர் கலவா அபயம்
வலவா திருஅம் பலவா அபயம்
உலவா நெறிநீ சொலவா அபயம்
உறைவாய் உயிர்வாய் இறைவா அபயம்
பலா குலம்நான் தரியேன் அபயம்
பலவா பகவா பனவா அபயம்
நலவா அடியேன் அலவா அபயம்
நடநா யகனே அபயம் அபயம்.
உரை: வல்லவனே, தில்லைப் பொன்னம்பலத்தை யுடையவனே; உயிர்களிடத்து உயிர்க் குயிராய் உறைபவனே, இறைவனே, மிக்க வலி யுடையவனே, பகவனே, பார்ப்பனனே, நல்லவனே, சந்திரனை முடியில் உடையவனே, கூத்தாடும் நாயகனே, ஆன்மாக்களுக்கு மலப்பிணிப்பால் உண்டாகும் துன்பங்களை அவற்றொடு கலந்து நீக்குபவனே, கேடு விளைவிக்காத நன்னெறியை எனக்குச் சொல்லும் பொருட்டு வந்தருள்க; பலவாய் வரும் துன்பங்களை நான் தாங்க மாட்டேன்; நல்லவனே, யான் உனக்கு அடிமை யல்லவா, என்னை ஆண்டருள்க. எ.று.
மலவாதனை - மும்மலங்களின் பிணிப்பால் ஆன்மாகட்கு உளவாகும் துன்பங்கள். கலவன் - கலந்திருப்பவன். வலவன் - எல்லாம் வல்லவன். திருவருள் ஞான நெறி என்றும் கெடாத நன்னெறியாய் இறைவனால் உணர்த்தப் படுவதாதலின், “உலவா நெறி நீ சொல வா” என வேண்டுகிறார். “உயிர்வாய் உறைவாய்” என இயைக்க. ஆகுலம் - துன்பம். பலவன் - பார்ப்பனன்.
இதனால், உலகியல் துன்பங்களைப் பொறாமை வெளிப்படுத்தியவாறாம். (7)
|