3618. கொடியேன் பிழைநீ குறியேல் அபயம்
கொலைதீர் நெறிஎன் குருவே அபயம்
முடியேன் பிறவேன் எனநின் அடியே
முயல்வேன் செயல்வே றறியேன் அபயம்
படியே அறியும் படியே வருவாய்
பதியே கதியே பரமே அபயம்
அடியேன் இனிஓர் இறையும் தரியேன்
அரசே அருள்வாய் அபயம் அபயம்.
உரை: சிவமாகிய பதிப் பொருளே, ஆன்மாக்கள் எய்தும் சிவகதியே, பரம்பொருளே, அருளரசே, கொடுமைப் பண்புடையவனாகிய என் பிழைகளைத் திருவுள்ளத்தில் கொள்ளற்க; உயிர்க் கொலை யில்லாத செந்நெறியை அருளிய குருபரனே, கெடுவதும் பிறப்பதும் மாட்டேனாய் நின் திருவடிப் பேறு ஒன்றையே கருதி முயலுகின்றேன்; வேறு செயல் ஒன்றுமறியேன்; உலகவர் காணும்படி என் முன் வந்தருள்க; அடியவனாகிய யான் உலகியல் துன்பங்களை இனி ஒருகணமும் தாங்க மாட்டேன். எ.று.
கொடியேன் - கொடுமைப் பண்புடையவன். கொலைநீர் நெறி - உயிர்க் கொலை நாடாத சன்மார்க்கச் செந்நெறி. முடிதல் - கெட்டழிதல். உலகிற் பிறந்த ஆன்மாக்கள் பிறந்திறந்து பிறப்புக்கே இரையாய்க் கெடுதலை விரும்பாமை புலப்பட, “முடியேன்” எனவும், “பிறவேன்” எனவும் மொழிகின்றார். திருவடிப் பேறு ஒன்றுதான் ஆன்மாக்களால் முயன்று பெறத் தக்கதாகலின், “நின்னடியே முயல்வேன் செயல் வேறு அறியேன்” என்று கூறுகின்றார். “படியே அறியும்படி” என்றவிடத்து, முதற்கண் உள்ள படி நிலவுலகத்து மக்கள் மேல் நிற்கிறது. பலரறியத் தோன்றிவிடின் தமது பவப்பணி நீங்கும் என எண்ணுகின்றாராதலின், “படியே அறியும் படியே வருவாய்” எனப் பகர்கின்றார். உலகியல் துன்ப மிகுதி காட்டற்கு, “அடியேன் இனி ஓர் இறையும் தரியேன்” என்று கூறுகின்றார்.
இதனால், பிறவித் துன்பங்களைப் பொறுக்க மாட்டாமை எடுத்து உரைத்தவாறாம். (8)
|